2017-12-20 15:42:00

கர்தினால் பெர்னார்ட் லா மறைவுக்கு திருத்தந்தையின் தந்தி


டிச.20,2017. டிசம்பர் 19, இச்செவ்வாய் மாலை, இறையடி சேர்ந்த கர்தினால் பெர்னார்ட் பிரான்சிஸ் லா அவர்களின் மறைவுக்கு, தன் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

கர்தினால்கள் அவையின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ சொதானோ அவர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள இந்தத் தந்தியில், உரோம் நகரின் பாதுகாவலரான மக்களின் நலம் காக்கும் அன்னை மரியாவின் பரிந்துரைக்கு, கர்தினால் லா அவர்களை ஒப்படைப்பதாகக் கூறியுள்ளார்.

மெக்சிகோ நாட்டில் வான்படை தளபதியாகப் பணியாற்றிவரின் மகனாக, 1931ம் ஆண்டு, நவம்பர் 4ம் தேதி, பிறந்த பெர்னார்ட் அவர்கள், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தன் பட்டப்படிப்பை நிறைவு செய்தபின், அருள்பணியாளர் பயிற்சியில் இணைந்து, 1961ம் ஆண்டு, அருள்பணியாளராகவும், 1973ம் ஆண்டு, ஆயராகவும் அருள்பொழிவு பெற்றார்.

1984ம் ஆண்டு, பாஸ்டன் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்ற இவரை, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால், 1985ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தினார்.

பாஸ்டன் உயர் மறைமாவட்டத்தில், 2002ம் ஆண்டு வரை பேராயராகப் பணியாற்றியபின், 2004ம் ஆண்டு, உரோம் நகரின் புனித மேரி மேஜர் பசிலிக்காவின் தலைமை அருள் பணியாளராகப் பொறுப்பேற்று, 2011ம் ஆண்டு தன் 80வது வயதில் ஒய்வு பெற்றார்.

இவ்வாண்டு நவம்பர் மாதம், 86 வயதை நிறைவு செய்த, கர்தினால் லா அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் பணியாற்றும் கர்தினால்களின் எண்ணிக்கை 216ஆக உள்ளது. இவர்களில், 120 பேர் 80 வயதுக்குட்பட்டவர்களாக, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.