2017-12-19 16:05:00

பாலனுக்காக காத்திருக்கும் குடில்கள், நம்பிக்கை அடையாளங்கள்


டிச.19,2017. இன்றைய உலகில் சில நாடுகள், குழந்தைகளின்றி, வெறுமை நாடுகளாக இருப்பது குறித்து தன் கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பிறப்பு விழாவுக்கென உருவாக்கப்பட்டுள்ள குடில்கள், குழந்தை இயேசுவின் திரு உருவங்கள் இன்றி காத்திருப்பதையும், குழந்தை பிறப்புகளின்றி சில நாடுகள் உள்ளதையும் ஒப்புமைப்படுத்திக் கூறினார்.

குழந்தைகளின்றி ஒரு நாடு வளர்வது என்பது ஆசீர்வாதமல்ல என்று தன் மறையுரையில் கூறிய திருத்தந்தை, குழந்தைப் பேறற்றவர்களாக நாம் வாழவேண்டும் என விரும்பும் சாத்தான், உடலளவிலும், ஆன்மீக அளவிலும், வாழ்வை வழங்குபவர்களாக நாம் வாழ்வதைத் தடைச் செய்கிறான் என்றார்.

நம்மில் தன்னலம் எனும் களைகளை வளர்த்து, நாம் கனி தராதவர்களாக வாழ்வதை விரும்பும் சாத்தான், நாம் பிறருக்காக வாழாமல் இருப்பதையே எதிர்பார்க்கிறான் என்றார் திருத்தந்தை.

கிறிஸ்மஸ் குடில் தற்போது இயேசு பாலன் இன்றி வெறுமையாக இருந்தாலும், அது நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது, ஏனெனில், இயேசு உறுதியாக வருவார் என்பது நமக்குத் தெரியும், அதுபோல், தொட்டில் எனும் நம் இதயம், வாழ்வைப் பெறவும் வழங்கவும், தன்னைத் திறந்ததாக உள்ளதா என்ற கேள்வியை எழுப்புவோம் எனவும் தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.