2017-12-16 15:54:00

பாசமுள்ள பார்வையில் – சிறியவற்றில் பெருமளவு மகிழ்வு...


சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இராபர்ட், ஒரு கடையில் வேலை செய்துவந்தார். கிறிஸ்மஸ் விழா நெருங்கிக்கொண்டிருந்ததால், கடையில் ஏகப்பட்ட வேலை குவிந்திருந்தது. தன்னையொத்த இளையோர், கிறிஸ்மஸ் விடுமுறையை மகிழ்வுடன் கழிக்கும்போது, தான் மட்டும், வறுமையின் காரணமாக, இவ்வாறு அடைபட்டிருப்பதை எண்ணி, இராபர்ட், உள்ளத்தில் குமுறிக்கொண்டே வேலை செய்தார்.

அவ்வேளையில், கிறிஸ்மஸ் விழாவுக்கு பொருள்கள் வாங்க, வயது முதிர்ந்த ஒருவர் வந்தார். அவருடன், ஒரு சிறுமி, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்தார். சற்று கவனித்துப் பார்த்தபோது, அச்சிறுமிக்கு இரு கைகளும், இரு கால்களும் இல்லை என்பதை இராபர்ட் உணர்ந்தார். இருந்தாலும், அச்சிறுமியின் முகத்தில் அளவற்ற ஆனந்தம் நிறைந்திருந்தது. அனைத்தையும் வியப்புடன் பார்த்து, அழகாய் புன்னகை செய்தவண்ணம் கடையை வலம்வந்த அச்சிறுமியைப் பார்த்து, இராபர்ட் கண் சிமிட்டினார். அதைக் கண்ட சிறுமி, இன்னும் கூடுதல் மகிழ்வுடன், முகம் மலர்ந்து சிரித்தார். அந்தச் சிரிப்பைக் கண்டபோது, அச்சிறுமி, எவ்வித குறையும் இல்லாத ஒரு தேவதைபோல் தோன்றினார், இராபர்ட்டுக்கு!

கடையைவிட்டுச் செல்லும்போது, அச்சிறுமி, இராபர்ட்டை அருகில் அழைத்து, அவர் கன்னத்தில் முத்தமிட்டார். பின்னர், 'ஹேப்பி கிறிஸ்மஸ்' என்று வாழ்த்து கூறிவிட்டு மறைந்தார். தனக்குக் கிடைத்த மிகச் சிறந்த கிறிஸ்மஸ் வாழ்த்து, கிறிஸ்மஸ் பரிசு அதுதான் என்று இராபர்ட் உணர்ந்தார். அச்சிறுமியின் தெய்வீகப் புன்னகை, தன் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த பாரமான எண்ணங்களைக் கரைத்துவிட்டதைப்போல் இராபர்ட் உணர்ந்தார்.

உண்மையான மகிழ்ச்சி, உள்ளத்தை நிறைக்கும் மகிழ்ச்சி, சின்னச் சின்ன நிகழ்வுகளில், எவ்வித ஆர்ப்பாட்டமோ, ஆடம்பரமோ, விளம்பரமோ இன்றி, நம்மை வந்தடைகின்றது என்பதைச் சொல்லித்தரும் விழா, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.