2017-12-15 14:57:00

மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வுக்கு எதிர்ப்பு


டிச.15,2017. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், டிசம்பர் 14, இவ்வியாழன் இரவில், குருத்துவ மாணவர்கள் மற்றும் அருள்பணியாளர்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ள வன்முறை, மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கின்றது என்று, இந்திய ஆயர் பேரவை கூறியுள்ளது.

Satna நகரின் புனித எப்ரேம் குருத்துவ கல்லூரியைச் சார்ந்த முப்பது குருத்துவ மாணவர்களும், இரு அருள்பணியாளர்களும், கிறிஸ்மஸ் பாடல் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தவேளையில், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வு குறித்து கண்டன அறிக்கை வெளியிட்ட, இந்திய ஆயர் பேரவை செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள், கிறிஸ்மஸ் காலத்தில், கடந்த முப்பது ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது என்றும், கைது செய்யப்பட்ட அருள்பணியாளர்கள் பற்றி விசாரிக்கச் சென்ற எட்டு அருள்பணியாளர்களும், கைது செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சி தருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மதமாற்றம் செய்வதற்காக இந்நிகழ்ச்சியை நடத்தினர் என்ற குற்றச்சாட்டு, அற்பத்தனமாகவும், விளையாட்டுத்தனமாகவும் உள்ளது என்றுரைத்துள்ள ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள், தேசியவாதக் குழுவினரால் இந்த வன்முறை தூண்டிவிடப்பட்டுள்ளது என்று குறை கூறியுள்ளார்.

அருள்பணியாளர்களின் வாகனத்தையும் காவல்நிலையத்திற்கு முன்பாகவே, அந்தக் குழுவினர் தீயிட்டு கொளுத்தியுள்ளது வெட்கத்துக்குரியது எனறும் அந்த அறிக்கை  கூறுகின்றது.

குருத்துவ மாணவர்கள் கிறிஸ்மஸ் பாடல்களைப் பாடத் தொடங்கியவுடன், அந்தக் குழுவினர் எதிர்ப்புக் கோஷமிட்டனர் என்று, அருள்பணி George Mangalappally அவர்கள் கூறியுள்ளார். 

இந்தியாவில், 2017ம் ஆண்டில், இதுவரை சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிராக, 650க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.