2017-12-15 15:05:00

பாசமுள்ள பார்வையில்...: மறக்க முடியவில்லை, முதல் குருவை


அவருக்கு இப்போது 60 வயதாகிறது. இருப்பினும் தன் சிறுவயதில் நடந்தவைகளை அசைபோடுவதில் அலாதி பிரியம். இப்போதும் அவரின் பாலர் பள்ளி ஆசிரியையின் பெயரும் முகமும் பசுமையாக மனதில் நிற்கின்றன. தான் என்ன எழுதினாலும் பாராட்டியவர் அந்த ஆசிரியை. தன்னிடம் மட்டுமல்ல, அனைத்து குழந்தைகளிடமும் அப்படித்தான் இருந்தார். ஒருநாள், ஆசிரியர் பெற்றோர் சந்திப்பின்போது, அந்த ஆசிரியையிடம் தன் தாய், 'வார்த்தைகளை தப்பு தப்பாக எழுத்துப் பிழையோடும், இலக்கணப் பிழையோடும் எழுதுகிறானே, அவன் எழுதும் நோட் புத்தகத்தில், நீங்கள் ஏன் அதனை திருத்துவதில்லை?. எப்போதும் நல்ல மதிப்பெண்களையே போடுகிறீர்கள். அத்தனை தவறுகள் இருந்தும், சிகப்பு மையால் திருத்தப்பட்ட பகுதி என்று அவன் நோட் புத்தகத்தில் ஒன்று கூட இல்லையே? ' என புகார் கூறினார். அதற்கு அந்த ஆசிரியை தன் தாயிடம், 'அம்மா. எழுத்துப் பிழைகளும், இலக்கணப் பிழைகளும் தங்கள் திருத்தத்திற்காக காத்திருக்கலாம். காலப்போக்கில் அவை சரியாகி விடும். ஆனால், சிகப்பு மையால் அவன் உற்சாகத்தைக் கட்டிப்போட நான் விரும்பவில்லை. தளிர்விடும்போதே, ஆர்வத்தை தட்டிப் பறிக்க வேண்டாம். அது பூத்துக்குலுங்கும்வரை, நம் நிபந்தனைகளை ஒதுக்கி வைத்து, பொறுமையாக இருப்போமே' என்று கூறினாராம். குழந்தைகளை குறைகூறி முடக்காமல், தட்டிக் கொடுத்து முன்னோக்கி அழைத்துச் சென்ற அந்த ஆசிரியையின் அணுகுமுறைதான், இன்றும் அவரை நினைவில் வைத்திருக்க உதவுகிறது என்பதை புரிந்துகொண்டார்  அந்த முதியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.