2017-12-14 15:59:00

ஏழு நாடுகளின் புதியத் தூதர்களைச் சந்தித்த திருத்தந்தை


டிச.14,2017. "எந்தெந்த இடங்களில் வாழ்ந்தாலும், பணியாற்றினாலும், நற்செய்திக்கு சாட்சியம் பகிரும் வகையில், மகிழ்வுடன் பணியாற்ற, உங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியிட்டார்.

ஏமன், நியூசிலாந்து, சுவாசிலாந்து, அசர்பைஜான், சாட், லீக்டன்ஸ்டெயின் மற்றும் இந்தியா ஆகிய ஏழு நாடுகளின் சார்பாக, திருப்பீடத்திற்குத் தூதர்களாகப் பணியாற்றும் புதிய தூதர்களை இவ்வியாழன் காலை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களிடமிருந்து நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்த ஏழு நாடுகளின் தூதர்கள், வத்திக்கானில் தங்காமல், ஏனைய நாடுகளில் தங்கியிருந்தவண்ணம் திருப்பீடத்திற்கு தூதர்களாகப் பணியாற்றுவர்.

இவர்களில், இந்தியாவைச் சார்ந்த திருவாளர் சிபி ஜார்ஜ் அவர்கள், 1967ம் ஆண்டு கேரளாவில் பிறந்து, கட்டார், பாகிஸ்தான், அமெரிக்க ஐக்கிய நாடு, ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் தூதரகங்களில் பணியாற்றியவர்.

இவ்வாண்டு நவம்பர் மாதம், சுவிட்சர்லாந்து நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் தூதராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் அவர்கள், ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகளை அறிந்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.