2017-12-11 15:04:00

வாரம் ஓர் அலசல் – மனிதம் காப்போம், மனிதம் வளர்ப்போம்


டிச.11,2017. சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவர், ஓய்வூதியத்துக்காக, கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகப் போராடி, அதில் வெற்றி பெற்றுள்ளார். முனுசாமி என்பவர், தனது 14வது வயதில், இந்திய நாட்டின் விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தவர். அக்காலத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட இவரைக் கைது செய்த பிரித்தானிய அரசு, இரங்கூன் சிறையில் வைத்துள்ளது. அதன்பின்னர் 1950ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையாகி நாடு திரும்பினார் முனுசாமி. பின்னர், தியாகிகளுக்கான ஓய்வூதியம் கோரி, கடந்த 1982ம் ஆண்டு முதல், மத்திய மாநில அரசுகளை அணுகினார் இவர். ஓய்வூதியம் வழங்குவது குறித்த இவரது வழக்கு, கடந்த 2008ம் ஆண்டு பரிசீலிக்கப்பட்டது. 14 வயதில் இராணுவத்தில் சேர்ந்திருக்க முடியாது என்று சொல்லி, நீதிமன்றம் அவரது கோரிக்கைகளை நிராகரித்தது. இதனை எதிர்த்து, முனுசாமி அவர்கள் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவர்கள், இதுவரை அவருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத் தொகையை இரண்டு மாதங்களிலும், இனிவரும் நாள்களில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்குள்ளும் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊழலுக்கு எதிரான அடுத்த சுதந்திரப் போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துள்ளதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இஞ்ஞாயிறன்று இச்செய்தியை வாசித்தபோது, உலக மனித உரிமைகள் நாளில் நல்லதொரு செய்தியாக உள்ளதே என்று நினைத்தோம்.

டிசம்பர் 10, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் நாளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின்னர் நினைவுகூர்ந்தார். இஞ்ஞாயிறன்று,  நார்வே நாட்டு ஓஸ்லோவில், அணு ஆயுதங்கள் ஒழிப்புக்காக உழைக்கும் பன்னாட்டு நிறுவனத்திற்கு இவ்வாண்டிற்குரிய நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் நாளோடு இணைந்து வருகின்றது. மனித உரிமைகளுக்கும், அணு ஆயுதங்கள் ஒழிப்புக்கும் இடையேயுள்ள வலுவான தொடர்பை இது கோடிட்டு காட்டுகின்றது. அனைத்து மக்களின், குறிப்பாக, வலுவற்றவர்கள் மற்றும் வாய்ப்பிழந்தவர்களின் மாண்பைப் பாதுகாப்பதற்குப் பணியாற்றுவதென்பது, அணு ஆயுதங்களற்ற உலகை அமைப்பதற்கு உழைப்பதாகும். நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை ஒன்றிணைந்து அமைப்பதற்கு கடவுள் நம்மிடம் திறமையைக் கொடுத்திருக்கிறார். தொழில்நுட்பத்தை நடத்திச் செல்வதற்கும், நம் சக்தியைக் கட்டுப்படுத்துவதற்கும், அமைதிக்கும், உண்மையான முன்னேற்றத்திற்கும் சேவையாற்றுவதற்கும் நம்மிடம் அமைதியும், அறிவும், திறமையும் உள்ளன என்று திருத்தந்தை கூறினார். ICAN எனப்படும், அணு ஆயுதங்கள் ஒழிப்புக்காக உழைக்கும் பன்னாட்டு நிறுவனம், ஜெனீவாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், 101 நாடுகளில், 468 அரசு-சாரா அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றது. இந்நிறுவனத்தின் உழைப்பால், அணு ஆயுதங்கள் ஒழிப்பு ஒப்பந்தத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவ்வாண்டின் அமைதி நொபெல் விருதை, இந்நிறுவனத்தின் செயல்திட்ட இயக்குனர் 35 வயது நிரம்பிய சுவீடன் நாட்டு Beatrice Fihn, ஹிரோஷிமாவில் அணுகுண்டு போடப்பட்டதைப் பார்த்த 85 வயது நிரம்பிய Setsuko Thurlow ஆகிய இருவரும் பெற்றனர்.

இன்றைய உலகில் ஏராளமான மக்கள், பல்வேறு முறைகளில், பல்வேறு சூழல்களில் மனித மாண்பையும், அடிப்படை உரிமைகளையும் இழந்து,  துன்புறுகின்றனர். தங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு, எத்தனையோ பேர் தனியொரு ஆளாக, தியாகி முனுசாமி போன்றோர், தொடர்ந்து போராடி அதில் வெற்றியும் பெறுகின்றனர். உரிமையிழந்த மக்களுக்காக, பல்வேறு அரசு-சாரா அமைப்புகளும் போராடி வருகின்றன. ஒக்கி புயலால் புரட்டிப் போடப்பட்ட தமிழக மக்களும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம், உரிமையோடு விண்ணப்பித்து வருகின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின்னர், இந்தியாவில் ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை, குறிப்பாக, இதில் காணாமல்போயுள்ள ஏராளமான மீனவர்களின் குடும்பங்களை சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

மனித உரிமைகள், உலக அளவில் அனைவருக்கும் சமமானது. இவை, மாற்றத்துக்கோ, திருத்தத்துக்கோ உட்படாதவை. இவை ஒன்றுக்கொன்று சார்ந்து நிற்கும் தன்மை கொண்டவை. அவை மக்களிடையே பாகுபாடுகளோ, பாரபட்சமோ காட்டாத பண்பு கொண்டவை. ஐ.நா. அறிக்கையின்படி, மனித உரிமைகள், வெறும் உரிமைகள் (Rights) மட்டுமல்ல, இவை நம் கடமைகளும் (Duty) ஆகும். வறுமை, பாகுபாடு, ஆயுத மோதல்கள், வன்முறை, சிலருக்கு மட்டும் தண்டனைகளில் இருந்து விடுதலை, சனநாயகமற்ற, பலவீனமான நிர்வாகம் போன்றவைகள், இவ்வுரிமைகளை, மனிதர் எல்லாரும் சமமாக அனுபவிக்க இயலாமல் தடை செய்கின்றன. கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், இஸ்ரேல் நாட்டின் தலைநகராக, எருசலேமை அங்கீகரிக்க முடிவெடுத்ததையடுத்து, பல நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அமெரிக்காவுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டாடிய நாடுகள் உள்பட, மொத்தம் 22 அரபு நாடுகள் இது குறித்து கண்டனம் தெரிவித்து உள்ளன. எருசலேம் நகரம், முழு மனித சமுதாயத்துக்கும் உரிய பொதுச் சொத்து. இந்நகரம், யூதம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களுக்கும் முக்கியமானது. இது, உலகளாவிய நகரமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று, எருசலேம் கத்தோலிக்கர் வலியுறுத்தி வருகின்றனர்.

புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் இக்காலத்தில், மனிதரின் அடிப்படை உரிமைகளும், மாண்பும் காக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில், 86 விழுக்காடு மூத்த குடிமக்கள், தங்களின் மனித உரிமைகள் குறித்து அறியாதவர்களாக உள்ளனர் என்று, வயது முதிர்ந்தோரைப் பராமரிக்கும், ஏஜ்வெல் (Agewell Foundation) எனப்படும், அரசு-சாரா அறக்கட்டளை கூறியுள்ளது. உலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு பற்றிக் கூறிய, அந்த அறக்கட்டளையை ஆரம்பித்து, அதன் தலைவராகப் பணியாற்றிவரும் Himanshu Rath அவர்கள், அறுபது முதல் எழுபது வயதிற்கு உட்பட்டவர்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் மிகவும் தீவிரமானவர்கள். ஆனால் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி, தலைமுறை இடைவெளி ஆகியவற்றால், அவர்கள் இதனை அறியாமல் உள்ளனர் என்று தெரிவித்தார். வயதானவர்களில் 68.8 விழுக்காட்டினர் மட்டுமே, தேவையான மருந்துகள், சுகாதாரப் பராமரிப்பு போன்றவை பற்றி தெரிந்து வைத்துள்ளனர். 23 விழுக்காட்டினர் மனிதாபிமானமற்ற முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 13 விழுக்காட்டினர் சரியான உணவைப் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இவர்கள் தவறாக நடத்தப்படுவதும், இவர்களுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படுவதும் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். டிசம்பர் 11, இத்திங்கள் மகாகவி சுப்ரமணி பாரதியார் பிறந்தநாள். மனிதரின், குறிப்பாக பெண்களின் உரிமைகளுக்காக அந்தக் காலத்திலேயே குரல் எழுப்பியவர் இவர். கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ளத் தூண்டி, கைம்பெண்களின் மறுமணத்தை ஆதரித்துப் பேசியவர் பாரதியார். ‘விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர்; விடுதலை என்பீர்; கருணை வெல்ல மென்பீர்; பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால், பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை’ என்று பாடினார் பாரதியார்.

மண்பானைகளைச் செய்துகொண்டிருந்த குயவர் ஒருவர், தன் பக்கத்தில் ஒரு காட்டு ஆட்டை கட்டிப் போட்டிருந்தார். அவ்வழியாகச் சென்ற துறவி ஒருவர், எதற்கு அந்த ஆட்டை கட்டிப் போட்டிருக்கிறாய் என்று கேட்டார். இது காட்டு ஆடு, இதைக் கடவுளுக்குப் பலி கொடுக்கப் போகிறேன் என்றார் குயவர். உடனே துறவி, குயவர் வனைந்த பானைகளில் இரண்டை அவர்முன் போட்டு உடைத்தார். இதைப் பார்த்த குயவர், கடுங்கோபம் கொண்டு, பைத்தியம்போல் எதற்கு இவற்றை உடைக்கிறீர்? என்று கேட்டார். அதற்கு துறவி, உனக்கு பிடிக்குமே என்றுதான் என்று சொன்னார். நான் உருவாக்கியதை உடைத்தால் எனக்கு எப்படி பிடிக்கும் என்று கேட்டார் குயவர். அதற்கு துறவி, உண்மைதான். இறைவன் கஷ்டப்பட்டு படைத்த உயிரை, அவர் முன்னாலேயே கொல்கிறாயே? அது மட்டும் ஆண்டவருக்கு எப்படி பிடிக்கும்? என்று கேட்டார். குயவர் ஆட்டின் கயிற்றை அவிழ்த்து விட்டுவிட்டார். ஆம். இறைவன் தம் சாயலில் படைத்த மனிதர் அவருக்கே உரியவர். அந்த மனிதரின் மாண்பையும், உரிமைகளையும் சிதைப்பது இறைவனையே இழிவுபடுத்துவதாகும். எனவே, ஒவ்வொரு மனிதரின் மாண்பையும், உரிமைகளையும் மதித்து, காத்து, மனிதம் வளர்ப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.