2017-12-09 13:13:00

பிலிப்பீன்ஸ் கொலை நடவடிக்கைகளுக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு


டிச.09,2017. மனிதரைக் கொலை செய்வது, தவிர்க்க இயலாத மற்றும், மறுக்க இயலாத மனிதரின் உரிமைகளை மீறுவதாகும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் கொலைகளில் ஒன்றாக, சான் ஹோசே மறைமாவட்டத்தைச் சார்ந்த 72 வயது நிரம்பிய அருள்பணியாளர் Tito Paez அவர்கள், கொலைசெய்யப்பட்டிருப்பது குறித்து பீதேஸ் செய்தியிடம் பேசிய, மராவி ஆயர் எட்வின் தெ லா பேனா அவர்கள், அரசுத்தலைவர் துத்தெர்த்தே அரசில் கொலைசெய்யப்பட்டுள்ள முதல் கத்தோலிக்க அருள்பணியாளர் இவர் என்று தெரிவித்துள்ளார்.

திருநிலைப்படுத்தப்பட்ட ஒருவரைக் கொலை செய்வது, ஏழைகள், சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் போன்றோர்க்கு ஆற்றும் மறைப்பணியைத் தடை செய்வதாகும், இது மாபெரும் பாவம் மற்றும், இக்குற்றம் நீதிக்காக கடவுளிடம் ஓலமிடுகின்றது என்றும் கூறியுள்ளார், ஆயர் எட்வின் தெ லா பேனா.

அருள்பணியாளர் மற்றும் அர்ப்பணிக்கப்பட்டோர் ஆண்டில் இந்தக் கொலை நடத்தப்பட்டுள்ளது என்றும், தங்களின் அடிப்படை மனித உரிமைகள் அநீதியாக மறுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த அருள்பணியாளர் ஆற்றிவந்த பணிகளைத் தடை செய்வதற்காக, இந்தத் தீயசெயல் நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ள ஆயர், இக்கொலைக்கு எதிரான தனது வன்மையான கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் 3ம் தேதி, 57 வயது நிரம்பிய Lovelito Quiñones என்ற கிறிஸ்தவ சபை போதகரும், அதே நாளில் எட்டு பழங்குடி இன மக்களும் இராணுவத்தால் சுட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.  

டிசம்பர் 10, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் உலக மனித உரிமைகள் நாளன்று, இக்கொலைகளை எதிர்த்து, இருபால் துறவிகள், இளம் கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், அருள்பணியாளர்கள் ஆகிய எல்லாரும், மனிலாவில், பெரிய அளவில் கண்டன போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று அறவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.