2017-12-09 15:37:00

எருசலேம், மனித சமுதாயம் அனைத்திற்கும் உரிய சொத்து


டிச.09,2017. எருசலேம் நகரம், மனித சமுதாயம் அனைத்திற்கும் உரிய சொத்தாகும், இந்நகரத்தின் மேன்மையை, புவியியல் சார்ந்த தகராறுகள் மற்றும் அரசியல் இறையாண்மையால் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை அலுவலகம் கூறியுள்ளது.

இந்நாள்களில், எருசலேம் மற்றும் அந்நகரின் எதிர்காலம் குறித்த அறிவிப்புகள் பெருகி வருகின்றன என்றும், வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு, கற்பனைக்கெட்டாத அளவுக்கு எதிர்விளைவுகள் இருக்கும் என்ற கவலை அனைவருக்கும் அதிகரித்துள்ளது என்றும், அந்த அலுவலகம் கூறியுள்ளது.

எருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் தலைநகராக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அண்மையில் அறிவித்துள்ளவேளை, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை அலுவலகம் இவ்வெள்ளியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எருசலேம் குறித்த அறிவிப்புகள் பற்றி கவலை தெரிவித்துள்ளார் என்றும், திருத்தந்தை, ஐ.நா.வின் பல்வேறு தீர்மானங்களைக் குறிப்பிட்டு, எருசலேம் புனித நகரின் தன்மை காக்கப்பட வேண்டும் என்றும், மத்திய கிழக்கில் மேலும் வன்முறைகள் உருவாக வழியமைக்கக் கூடாது என விண்ணப்பித்துள்ளார் என்றும், அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும், எருசலேம் விவகாரம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, புனித பூமி காவலராகிய, பிரான்சிஸ்கன் அருள்பணி Ibrahim Faltas அவர்கள், எருசலேம், தனித்துவமிக்க நகரம் என்றும், எருசலேமை உலகளாவிய நகரமாகவும், எல்லாருக்கும் உரியதாகவும் அமைப்பதற்கு, உலகளாவிய சமுதாயம் ஒரு தீர்வைக் காண வேண்டுமென்றும் கூறினார்.

இன்னும், டொனால்டு டிரம்ப் அவர்களின் தீர்மானம் குறித்து எச்சரித்துள்ள, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர், Nickolay Mladenov அவர்கள், இத்தீர்மானம் வன்முறையைத் தூண்டிவிடும் என்றும், எருசலேம் நகரம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு நகரமாக தற்போது விளங்கி வருகின்றது, இந்நிலை எப்போதும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.