2017-12-09 15:22:00

அன்னையே, வெளிநாட்டவர் மீதுள்ள பயத்தை அகற்ற உதவும்


டிச.09,2017. புறக்கணிப்பு, வெளிநாட்டவர் மற்றும் வித்தியாசமான மனிதர் மீது பயம், மனிதர் சுரண்டப்படல், அவமதிப்பு போன்ற நோய்க் கிருமிகளைப் புறக்கணித்து வாழ்வதற்கு, மனித சமுதாயத்திற்கு உதவியருளும் என்று, அன்ன மரியாவிடம், இவ்வெள்ளி மாலையில் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமல அன்னை பெருவிழாவாகிய டிசம்பர் 08, இவ்வெள்ளி மாலையில், உரோம் இஸ்பானிய வளாகத்திலுள்ள, அமல அன்னை நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அன்னையிடம் செபித்த திருத்தந்தை, தங்களிடமிருந்து வித்தியாசமாகத் தெரியும் மனிதர்களைப் புறக்கணிக்கும் நோயிலிருந்து விடுபட, எங்களுக்கு உதவியருளும் என்று செபித்தார்.

அமல அன்னையே, உரோம் நகரின் ஆயராகப் பொறுப்பேற்ற பின்னர், உரோம் நகர மக்கள் சார்பாக, உமக்கு மரியாதை செலுத்துவதற்கு ஐந்தாவது முறையாக இங்கு வந்துள்ளேன் என்று, செபத்தை ஆரம்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகப் பயணத்தில், எங்கள் எல்லாருடனும் உடனிருந்து காத்துவருவதற்கு நன்றி என்றார்.

இந்த நினைவிடத்தைவிட்டு வெகு தூரத்தில் இல்லாத, புனித Andrea delle Fratte பசிலிக்காவில், 175 ஆண்டுகளுக்கு முன்னர், அல்போன்சோ ராட்டிஸ்போனே என்பவரின் இதயத்தைத் தொட்டீர், அந்நேரத்தில் கடவுள் நம்பிக்கையற்று, திருஅவையின் எதிரியாக இருந்த அவர், பின்னர் கிறிஸ்தவராக மாறினார் என்றும், செபத்தில் அன்னையிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நிகழ்வை நிறைவு செய்து, வத்திக்கான் திரும்பிய வழியில், புனித Andrea delle Fratte பசிலிக்கா சென்று, அன்னையிடம் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்ஸ் நாட்டு பணக்கார யூதரான ராட்டிஸ்போனே என்பவருக்கு, 1842ம் ஆண்டு சனவரி 20ம் நாளன்று, இந்த பசிலிக்காவில் அன்னை மரியா காட்சியளித்தார். இக்காட்சிக்குப் பின்னர், ராட்டிஸ்போனே அவர்கள், கத்தோலிக்கத்தைத் தழுவி, இயேசு சபையில் சேர்ந்து அருள்பணியாளராகி, மறைப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டார். சியோன் நமதன்னை சபையையும் ஆரம்பித்த இவர், யூதர்களைக் கத்தோலிக்கத்திற்கு மாற்றும் பணிக்கும் தன்னை அர்ப்பணித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.