2017-12-08 13:12:00

எருசலேம் குறித்த டிரம்பின் செயல்பாடு கிறிஸ்தவர்களுக்கு கவலை


டிச.08,2017. இஸ்ரேல் நாட்டின் தலைநகராக, எருசலேம் நகரை அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அங்கீகரித்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, புனித பூமியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு, உலகளாவிய சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர், புனித பூமி கிறிஸ்தவத் தலைவர்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவரின் இந்த அறிவிப்பு குறித்து, CNA கத்தோலிக்கச் செய்தியிடம் பேசிய, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை தலைமையகத்தில் பணியாற்றும் அருள்பணி  David Neuhaus அவர்கள், இந்த அறிவிப்பு எருசலேமில் வாழும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

வன்முறை எந்த அளவுக்கு இடம்பெறப்போகின்றது? எத்தனை மக்கள் உயிரிழக்கப் போகின்றனர்? போன்ற கவலைகள் நிலவுகின்றன என்று தெரிவித்த அருள்பணி  Neuhaus அவர்கள், உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, எருசலேம் குறித்த பன்னாட்டு சட்டத்திலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு விலகிச் செல்கின்றது என்று குறை கூறினார்.

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் ஆகிய அனைவருக்கும் புனிதமாகவும், சிறப்பான மத முக்கியத்துவம் பெற்றதாகவும் விளங்கும் எருசலேம் நகரின் புனித இடங்கள் மட்டுமின்றி, அந்நகருக்கு வருகின்ற திருப்பயணிகள் பாதுகாக்கப்படுவது குறித்த அச்சம் எழுந்துள்ளது என்று, அருள்பணி  Neuhaus அவர்கள் மேலும் கூறினார்.

இதற்கிடையே, டிசம்பர் 06, இப்புதனன்று, தன் பொது மறைக்கல்வி உரையை வழங்கியபின், எருசலேம் நகரை மையப்படுத்தி, அண்மைய நாட்களில் உருவாகியுள்ள பிரச்சனைகள் தனக்கு கவலை அளிப்பதாகவும், ஐக்கிய நாடுகள் அவை பரிந்துரைத்திருக்கும் கொள்கைகளின்படி, அந்நகரை, பொதுவான ஒரு நகரமாக விட்டுவிடுவதே, அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.