2017-12-07 15:42:00

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடில் திறப்பு


டிச.07,2017. வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தை அலங்கரித்திருக்கும் பெரிய கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும், டிசம்பர் 7ம் தேதி, இவ்வியாழன் மாலை தொடங்கி வைக்கப்பட்டது.

கிறிஸ்மஸ் குடிலில் வைக்கப்பட்டுள்ள உருவங்கள் மற்றும் அதன் அமைப்பை, தென் இத்தாலியின் Campania மாநிலத்திலுள்ள பழமைவாய்ந்த Montevergine துறவுமடத்தைச் சார்ந்தவர்கள் வழங்கியுள்ளனர். நேப்பிள்ஸ் பகுதியின் 18ம் நூற்றாண்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் இந்த உருவங்கள், பல இரக்கப் பணிகளில் ஈடுபட்டிருப்பதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரம், 28 மீட்டர் உயரம் கொண்டது. போலந்து நாட்டின் வட கிழக்குப் பகுதியிலுள்ள Elk உயர்மறைமாவட்டம் இதனை வழங்கியுள்ளது.

இம்மரம், உள்ளூர் வனத்துறைப் பணியாளர்களால் வெட்டப்பட்டு, மத்திய ஐரோப்பா, மற்றும், இத்தாலி வழியாக, 2000த்திற்கும் மேற்பட்ட கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, வத்திக்கான் வந்து சேர்ந்துள்ளது.

இத்தாலியின் பல்வேறு மருத்துவமனைகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், மற்றும், இத்தாலியில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Spoleto-Norcia பகுதியில் வாழும் குழந்தைகள் இணைந்து வடிவமைத்துள்ள பொம்மைகளும், ஏனைய அலங்காரப் பொருள்களும், வளாகத்தில் உள்ள கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரித்துள்ளன.

டிசம்பர் 7ம் தேதி திறக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடிலும், மரமும், 2018ம் ஆண்டு, சனவரி 7ம் தேதி, ஞாயிறன்று கொண்டாடப்படும் இயேசுவின் திருமுழுக்குத் திருநாள் முடிய வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.