2017-12-07 13:36:00

பாசமுள்ள பார்வையில்.. அரசருக்குப் பாடம் சொன்ன அம்மா


பதினெட்டாம் நூற்றாண்டில், புருசியாவை ஆட்சி செய்து வந்த மன்னர் Frederick William என்பவர் முன்கோபக்காரர். அவர் பெர்லின் நகர தெருக்களில் தன் விருப்பம்போல் நடப்பார். தான் நடந்துசெல்கையில் யாரேனும் தாறுமாறாக நடந்துகொண்டால் அடிக்கவும் தயங்கமாட்டார் அவர். நகரமக்கள் அவரைக் கண்டாலே, அவர் கண்ணில் படாமல் மறைந்துவிடுவர். ஒருநாள், மன்னர் வீதியில் நடந்துசென்றபோது, வயது முதிர்ந்த ஓர் அம்மா மன்னரின் கண்ணில் பட்டுவிட்டார். அந்த அம்மா தப்பிக்க முயன்றபோது, மன்னர் அவரைப் பிடித்துவிட்டார். எங்கே போகிறாய்? என அதட்டினார் மன்னர். இதோ இந்த வீட்டிற்கு என்று நடுங்கிக்கொண்டே கூறினார் அவர். இது உன் வீடா? என்று மறுபடியும் மன்னர் கேட்க, இல்லை என்றார் அந்த அம்மா. பின் ஏன் அங்கே நுழைய முயன்றாய் என்று மன்னர் கேட்டார். தன்னை திருடி என்று, மன்னர் நினைத்து விடுவாரோ என்ற அச்சத்தில், அரசே, உங்கள் பார்வையிலிருந்து மறையவே என்று, உண்மையை உளறிவிட்டார் அந்த அம்மா. ஏன் என்னிடமிருந்து மறையப் பார்த்தாய் என்று மன்னர் கேட்க, உங்களைப் பார்த்தாலே உடம்பெல்லாம் நடுங்குகிறது என்றார் அந்த அம்மா. இப்படிச் சொல்வதற்கு உனக்கு என்ன துணிச்சல், நான் உன் அரசன், நீ என்மீது அன்பு செலுத்த வேண்டும். இது உன் கடமை. இவ்வாறிருக்க, அறிவுகெட்ட பெண்ணே, நீ என்மீது அன்புகூர், நீ என்மீது அன்புகூர், புரிகிறதா என்று, அந்த அம்மாவின் தலையைப் பிடித்து அதட்டினார் மன்னர். மன்னிக்க வேண்டும் மன்னா, அன்பு, கேட்டுப் பெறுவதல்ல என்று நடுங்கிய குரலில் சொன்னார், அந்த வயது முதிர்ந்த அம்மா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.