2017-12-07 15:55:00

தைவான் கிறிஸ்தவ தேசிய கழகத்தினருடன் திருத்தந்தை


டிச.07,2017. மியான்மாரிலும், பங்களாதேஷிலும் நான் பயணம் மேற்கொண்டபோது, வசதிகளும், வாய்ப்புக்களும் இல்லாதச் சூழலிலும், ஆசிய மக்கள் கொண்டுள்ள துடிப்பு, ஆர்வம், முனைப்பு ஆகியவற்றை நேரடியாக கண்டுணர்ந்தேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு குழுவினரிடம் உரையாற்றினார்.

தைவான் நாட்டின் கிறிஸ்தவ அவைகள் தேசிய கழகத்தின் உறுப்பினர்களை டிசம்பர் 7, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, தன் ஆசிய பயணத்தின் அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டார்.

அன்பின்றி உண்மையான அமைதியை நிலைநாட்ட முடியாது என்று, தைவான் கிறிஸ்தவ அவைகள் தேசிய கழகத்தின் உறுப்பினர்கள் கூறியதை தான் முற்றிலும் ஆமோதிப்பதாகவும், ஒவ்வொரு தனி மனிதரின் மதிப்பை உறுதி செய்வது, இறைவனின் அன்பை இவ்வுலகில் நிலைநாட்ட உதவும் அடித்தளம் என்றும் திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

1991ம் ஆண்டு நிறுவப்பட்ட தைவான் கிறிஸ்தவ அவைகள் தேசிய கழகத்தின் வழியாக, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்ட அனைவரையும் இணைக்கும் முயற்சியில், கத்தோலிக்கத் திருஅவையும் இணைந்துள்ளது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு, இன்றைய இளையோரை தகுந்த வழிகளில் நடத்திச்செல்வது மிக முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு வழிகளில் இளையோர் நடைபயில்வதற்கு உதவியாக, அவர்களோடு நாமும் உடன் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.