2017-12-07 15:32:00

திருத்தந்தை: கிறிஸ்மஸ் குடிலும், மரமும், பேசும் அடையாள மொழி


டிச.07,2017. இறைமகன் இவ்வுலகில் பிறந்ததைக் கண்முன் கொண்டுவரும் கிறிஸ்மஸ் குடிலும், மரமும், அடையாள மொழியில் நம்முடன் பேசுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.

புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் அமைந்துள்ள கிறிஸ்மஸ் மரத்தையும், கிறிஸ்மஸ் குடிலையும் தானமாக வழங்கியோர், மற்றும் இந்த மரத்தில் இணைக்கப்பட்டுள்ள அலங்காரங்களை உருவாக்கிய குழந்தைகள் என, 4000த்திற்கும் அதிகமானோரை, வத்திக்கான், திருத்தந்தை ஆறாம் பால் அரங்கத்தில் சந்தித்த வேளையில், திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

நேபிள்ஸ் பகுதியின் கலையை வெளிப்படுத்தும் குடில் உருவங்கள், இரக்கத்தின் பணிகளை வெளிப்படுத்தும்வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது, "பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (மத்தேயு 7:12) என்று இயேசு கூறியதை நினைவுறுத்துகின்றன என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

கடினமானச் சூழல்களில் வாழ்ந்தாலும், தங்கள் கனவுகளையும், விருப்பங்களையும் பொம்மைகளாக வடிவமைத்துள்ள குழந்தைகளை தான் சிறப்பாகப் பாராட்டுவதாகக் கூறியத் திருத்தந்தை, உலகெங்கிலுமிருந்து வத்திக்கான் வளாகத்திற்கு வரும் பயணிகள் அனைவரும், இக்குழந்தைகளிடம் விளங்கும் நம்பிக்கையிலிருந்து பாடங்கள் பயில முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.