2017-12-07 16:04:00

அகில உலக லூத்தரன் அவையினரைச் சந்தித்த திருத்தந்தை


டிச.07,2017. அகில உலக லூத்தரன் அவையின் புதியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள லுத்தரன் பேராயர், Musa Panti Filibus அவர்களையும், பொதுச்செயலர் Martin Junge அவர்களையும், மற்றும் அவையின் உயர் மட்ட பிரதிநிதிகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

மார்ட்டின் லூத்தர் அவர்கள் துவக்கிய சீர்திருத்த இயக்கத்தின் 500ம் ஆண்டு, இவ்வாண்டு அக்டோபர் மாதம் நிறைவுற்றதை தன் உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இவ்வாண்டு மே மாதம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராயர் Filibus அவர்களுக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, சுவீடன் நாட்டின் லுண்ட் நகர் லூத்தரன் பேராலயத்தில் தான் கலந்துகொண்ட செப வழிபாட்டை சிறப்பாக நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபம் ஒன்றே கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு உறுதியான பாதை என்பதையும் எடுத்துரைத்தார்.

ஒருவர் மற்றொருவரைப் பற்றிய சரியான கண்ணோட்டம் கொள்வதற்கு செபம் ஒரு முக்கிய கருவி என்பதை, தன் உரையில் வலியுறுத்திய திருத்தந்தை, வரலாற்று காயங்களை மறந்து, உடன்பிறந்தோராய் பயணம் செய்வதற்கு, தூய ஆவியாரின் துணையை, செபத்தின் வழியே நாடுவோமாக என்று கூறினார்.

அர்ப்பண உணர்வுடன், வறியோருக்குப் பணியாற்றுவதில், கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து வருவது, நம் உறவை மேலும் உறுதிப்படுத்துகிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அகில உலக லூத்தரன் அவை பிரதிநிதிகளிடம் மகிழ்வுடன் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.