2017-12-06 15:06:00

திருத்தந்தையுடன் பாலஸ்தீன அரசுத்தலைவர் தொலைப்பேசியில்...


டிச.06,2017. பாலஸ்தீன அரசுத்தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், இச்செவ்வாய் மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, எருசலேம் குறித்த தன் கவலையை வெளிப்படுத்தினார் என்று, வத்திக்கான் செய்தித் தொடர்பாளர், Greg Burke அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு டிரம்ப் அவர்கள், இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவிலுள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை, எருசலேம் நகருக்கு மாற்றப்போவதாக கூறியுள்ளதையடுத்து, பாலஸ்தீன அரசுத்தலைவர், டிரம்ப் அவர்களுடன் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து, திருத்தந்தையையும் தொடர்பு கொண்டார் என்று Greg Burke அவர்கள் தெரிவித்தார்.

பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் உட்பட, பல நாடுகளின் தலைவர்கள், இந்த மாற்றம் குறித்து அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களிடம் எச்சரிக்கை அளித்தும், எருசலேம் நகருக்கு தன் தூதரகத்தை மாற்றும் முடிவை, இப்புதனன்று டிரம்ப் அவர்கள் தெரிவிக்கக்கூடும் என்று, ஊடகங்கள் கூறியுள்ளன.

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், "இறைவனின் எந்த ஒரு குழந்தையும், அவர் கண்களிலிருந்து புறக்கணிக்கப்படுவதில்லை. அந்தப் பணியை அவர் நம் ஒவ்வொருவருக்கும் தந்துள்ளார்" என்ற சொற்களைப் பதிவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.