2017-12-02 14:27:00

பங்களாதேஷ் இளையோருக்கு திருத்தந்தை வழங்கிய உரை


டிச.02,2017. அன்பு இளம் நண்பர்களே, மாலை வணக்கம்! இளையோராகிய உங்களைச் சந்திக்கும்போதெல்லாம், நானும் இளமையடைவதைப்போல் உணர்கிறேன். உங்களது ஆர்வம், துணிகரச் செயலாற்றும் மனப்பான்மையிலிருந்து எழுகின்றது. உங்கள் துணிவைக் குறித்து, உங்கள் தேசியக் கவிஞர், Kazi Nazrul Islam அவர்கள், "இந்நாட்டின் இளையோர், இருளின் கருவறையிலிருந்து வெளிச்சத்தை எடுத்துவருமளவு அச்சமற்றவர்கள்" என்று கூறியுள்ளார்.

நல்ல நேரங்களானாலும், பொல்லாத நேரங்களானாலும், துணிவுமிக்க இந்த ஆர்வத்துடன் முன்னேறிச் செல்லுங்கள். பிரச்சனைகள் சூழ்ந்தாலும், இறைவன் எங்குமே இல்லாததுபோல் தோன்றினாலும், தொடர்ந்து முன்னேறுங்கள்.

அவ்வாறு முன்னேறும்போது, சரியானப் பாதையைத் தெரிவு செய்யுங்கள். குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள். இலக்கின்றி அலைந்து திரிய வேண்டாம். அவ்வாறு அலைந்து, திரியும்போது, ஞானத்தை இழந்துவிடுவீர்கள். இவ்வுலகம் காட்டும் ஞானத்தைத் தேடாமல், இறைவன் மீது நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் பெற்றோர், பெரியவர்கள் கண்களில் தெரியும் ஞானத்தைக் கண்டுணருங்கள்.

மகிழ்வைத் தருவதாகக் கூறும் தவறான வாக்குறுதிகளை விலக்குவதற்கு இந்த ஞானம் உதவுகிறது. பொய்யான வாக்குறுதிகளைத் தரும் கலாச்சாரம், நம் உள்ளங்களை, சுயநலத்தால், இருளால், வெறுப்பால் நிறைத்துவிடுகிறது. இந்த குறுகியக் கண்ணோட்டத்தில் சிக்கி, சுயநலத்தில் புதையுண்டால், வாழ்வு அர்த்தமற்றதாகிவிடும். இறைவனின் ஞானம் நம்மை அயலவர் நோக்கித் திறந்த மனம் கொள்ள வைக்கிறது. நம் சுயநலனைத் தாண்டி பார்க்கும் கண்ணோட்டத்தைத் தருகிறது.

நாம் மேற்கொண்டுள்ள இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள, இளம் இஸ்லாமிய நண்பர்களும் இங்கு வந்திருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மதவேறுபாடுகளைத் தாண்டி, நல்லிணக்கத்தையும், அயலவர் நோக்கி கரம் நீட்டுவதையும், இந்த சந்திப்பு உறுதி செய்கிறது. நான் புவனஸ் அயிரஸ் நகரில் அடைந்த ஓர் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அங்கு, மிகவும் வறுமைப்பட்ட ஒரு பங்கில், கிறிஸ்தவ, யூத, கம்யூனிச இளையோர் இணைத்து, பங்கிற்கென சில அறைகளைக் கட்டிக்கொண்டிருந்த நிகழ்வை இப்போது எண்ணிப்பார்க்கிறேன். பொதுவானப் பணிகளை ஆற்ற, இளையோர், தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு வருவது அழகானது.

நமது வேறுபாடுகளை மறந்து, நம் கலாச்சாரப் பாரம்பரியத்தின் நன்மைத்தனத்தை உணர்வதற்கு, கடவுளின் ஞானம் உதவுகிறது. நான் துவக்கத்தில் கூறியதுபோல், பெரியவர்களிடமிருந்து இந்த ஞானத்தை நாம் கற்றுக்கொள்ள முடியும். எனவே, உங்கள் செல்போன்களுடன் நாள் முழுவதையும் செலவழிக்காமல், பெற்றோர், பெரியவர்கள் ஆகியோருடன் பேசுங்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாம், இயேசுவைச் சந்திப்பதில் நம் மகிழ்வை உணர்கிறோம்.

அன்பு இளம் நண்பர்களே, உங்கள் முகங்களைக் காணும்போது, மகிழ்வும், நம்பிக்கையும் என்னை நிரப்புகின்றன. அன்பில் வளர்வதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக! இந்த நாட்டைவிட்டு நான் புறப்படும் இவ்வேளையில், உங்களுக்காகச் செபிப்பேன் என்று உறுதி கூறுகிறேன். தயவுசெய்து, எனக்காக செபிக்க மறவாதீர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.