2017-12-01 13:19:00

பங்களாதேஷ் ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


டிச.01,2017. அன்பு சகோதர ஆயர்களே, நாம் ஒன்றுகூடியிருப்பது எத்துணை நன்று! கர்தினால் பாட்ரிக் அவர்கள், 1985ம் ஆண்டின் மேய்ப்புப்பணி திட்டத்தைப்பற்றி குறிப்பிட்டதை நான் பாராட்டுகிறேன். இறைமக்களுடன் இணைந்து தேடலை மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி திட்டம் பயனுள்ளதாக அமையும்.

ஒருங்கிணைதல் என்பது, இத்திட்டத்தின் இதயத் துடிப்பாக விளங்குகிறது. உங்களிடையே நிலவும் பிணைப்பில், உங்கள் சகோதர அருள்பணியாளர்களும் பங்கேற்கின்றனர். மக்களைச் சந்திப்பதிலும், அவர்களது நலமான வாழ்வுக்கு வழிவகுப்பதிலும் உங்கள் மேய்ப்புப்பணி திட்டம் செயல்வடிவம் பெறுகிறது.

உங்கள் சகோதர அருள்பணியாளர்களுடன் நீங்கள் கொண்டுள்ள பிணைப்பை மேலும் வளர்த்து வாருங்கள். அதேவேளையில், இறைமக்களோடும் உங்கள் அதிகமான அருகாமையை வெளிப்படுத்துங்கள். பொதுநிலையினரிடையே உள்ள அருங்கொடைகளை அங்கீகரியுங்கள்.

இந்நாட்டில் பணியாற்றும் பல மறைக்கல்வி ஆசிரியர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இவர்கள், தொலைதூரத்தில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மறைப்பணியாளர்கள். அவர்களது நலனிலும், தொடர் பயிற்சிகளிலும் அக்கறை காட்டுங்கள். அடுத்துவரும் ஆயர் மாமன்றத்திற்கு தயாரிக்கும் வகையில், இளையோருடன் உங்கள் மகிழ்வு, உண்மை, நம்பிக்கையின் அழகு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

குடும்பங்களுக்கும், குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்கும் பங்களாதேஷ் தலத்திருஅவை எடுத்துவரும் முயற்சிகள் சிறப்பானவை. குடும்பங்களில் விளங்கும் அன்பு, விருந்தோம்பல் பண்பு, பெற்றோருக்கும், வயது முதிர்ந்தோருக்கும் காட்டப்படும் மரியாதை ஆகியவை, இந்நாட்டு மக்கள் வெளிப்படுத்தும் குணநலன்கள்.

உங்கள் மேய்ப்புப்பணி திட்டத்தின் குறிப்பிடத்தக்க இலக்கு - ஏழைகள் சார்பில் முடிவெடுப்பது (Option for the poor). ஏழைகளுக்கு ஆற்றும் பணியைக்குறித்து பங்களாதேஷ் கத்தோலிக்க சமுதாயம் உண்மையில் பெருமிதம் கொள்ளலாம். எளிதில் சென்றடைய இயலாத பகுதிகளிலும், பழங்குடியினர் மத்தியிலும், கல்வி புகட்டவும், நலப்பணி ஆற்றவும் கத்தோலிக்க சமுதாயம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஏழைகள் சார்பில் முடிவெடுப்பதன் வழியே, 'இரக்கத்தின் கலாச்சாரத்தை' உருவாக்கி வருகிறீர்கள்.

பல்சமய, மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு சந்திப்புக்கள், என் மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு முக்கிய அங்கம். அத்தகைய சந்திப்பு, இன்று நடைபெறவுள்ளது. பல்சமய உரையாடலுக்கு திருஅவை அளிக்கும் கவனம், நல்லெண்ணத்தையும், நல்லிணக்கத்தையும் உருவாக்குகிறது.

மதத்தின் பெயரால், வன்முறை அணிவகுக்கும்போது, மதத்தலைவர்கள் இணைந்து, ஒரே குரலாய், அதை கண்டனம் செய்யும்போதும், மோதல் கலாச்சாரத்திற்கு எதிராக சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்கும்போதும், ஒவ்வொரு மதமும், தங்கள் பாரம்பரியத்தின் ஆழமான உண்மைகளை வெளிக்கொணர்கின்றது. இளையோர் நீதியான பாதையில் வழிநடக்க, இணையற்ற சேவை புரிகிறது.

அன்பு சகோதர ஆயர்களே, என் திருத்தூதுப் பயணத்தின் வழியே, பங்களாதேஷ் நாட்டின் துடிப்புள்ள தலத்திருஅவையைக் கண்டு மகிழ்கிறேன். 'எதிர்ப்புக்களைச் சந்திக்கும்போது, நற்செய்தியைத் துணிவுடன் அறிவிக்க' (Evangelii Gaudium, 259), தூய ஆவியாரின் புதிய பொழிவுக்காகச் செபிப்போம். அருள்பணியாளர், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் புத்துணர்வு பெற்ற சக்தியுடன், நற்செய்தியை, தங்கள் சொற்களால் மட்டுமல்ல, செயல்களால், வாழ்க்கையால் பறைசாற்றுவார்களாக!

உங்கள் அனைவருக்கும் என் ஆசீரை வழங்குகிறேன்! எனக்காக செபிக்க மறவாதீர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.