2017-11-30 15:06:00

மியான்மாரில் திருத்தூதுப் பயண நிறைவு


நவ.30,2017. நவம்பர் 30, இவ்வியாழன் திருத்தூதர் அந்திரேயா திருவிழா. இப்புனிதரைப் பாதுகாவலராகக் கொண்டிருக்கும், கான்ஸ்ட்டான்டிநோபிள் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் தலைவரான முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலமேயோ அவர்களுக்கு, கைப்பட எழுதிய வாழ்த்துச் செய்தி ஒன்றை, இவ்வியாழனன்று அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். மியான்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு நான் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுவரும் இவ்வேளையில், முதுபெரும் தந்தையே, தங்களுக்கும், தங்கள் சபையினர் எல்லாருக்கும் என் உடன்பிறப்பு உணர்வு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என்று, அச்செய்தியைத் தொடங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆறு நாள்கள் கொண்ட மியான்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான திருத்தந்தையின் இந்த 21வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், இவ்வியாழன், மியான்மார் நாட்டிற்கு நிறைவு நாள். பங்களாதேஷ் நாட்டிற்கு முதல் நாள். கடந்த மூன்று நாள்களாக, தான் தங்கியிருந்த யாங்கூன் பேராயர் இல்லத்தில் தனக்கு உதவி செய்த எல்லாருக்கும் நன்றி சொல்லி, இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 9.15 மணிக்கு, அவ்வில்லத்தைவிட்டுப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மியான்மார் நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியாக, யாங்கூன் அமல அன்னை பேராலயத்தில், அந்நாட்டு இளையோருக்கு, திருத்தூதர் அந்திரேயா விழா திருப்பலி நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். இலத்தீன், ஆங்கிலம், பர்மியம் ஆகிய மொழிகளில் நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்துவின் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்கள் செபங்களும் ஒருமைப்பாடும் தேவைப்படும் துன்புறும் சகோதர, சகோதரிகளுக்கு, குறிப்பாக, உங்கள் வயதை உடையவர்களுக்கு, இயேசுவின் நற்செய்தியை எடுத்துச் செல்லுங்கள் என்று இளையோரிடம் கேட்டுக்கொண்டார். மேலும், இத்திருப்பலியில், தமிழ், கச்சின், கயான், சின், கரேன், சீனம் ஆகிய மொழிகளில், விசுவாசிகள் மன்றாட்டு சொல்லப்பட்டது. முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் சோழர் பேரரசு, பர்மிய அரசுகளோடு வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தாலும், பர்மாவில், நெல் வயல்கள் மற்றும் இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின்போது, தமிழர்கள் இந்தியாவிலிருந்து பர்மாவுக்குச் சென்றனர். 1966ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பர்மாவில், 2 இலட்சம் தமிழர்கள் இருந்தனர் என அறிகிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பர்மாநில் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாய் குறையத் தொடங்கியது. பலர் இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் சென்றனர். 1940ம் ஆண்டுக்கும், 1942ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஏராளமான மலேசியர்களும், பர்மியத் தமிழர்களும், ஜப்பானிய ஆக்ரமிப்பாளர்களால், தாய்லாந்துக்கும், பர்மாவுக்கும் இடையே 415 கிலோ மீட்டர் நீள இரயில் பாதை அமைக்கும் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். அவ்வேலையில், கொடிய விலங்குகளின் தாக்குதல், நோய், களைப்பு, ஜப்பானியர்களின் சித்ரவதை போன்றவைகளால், ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் இறந்தனர். இவ்வாறு அக்காலத்தில் மியான்மாரில் குடியேறிய தமிழர்களின் தலைமுறைகள், இன்றும் வாழ்ந்து வருகின்றன. யாங்கூன் அமல அன்னை பேராலயத்தில், திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், அந்நாட்டு கர்தினால் சார்லஸ் போ அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார். இத்திருப்பலியை நிறைவு செய்து, யாங்கூன் பன்னாட்டு விமான நிலையம் சென்று, மியான்மார் நாட்டு, பிமான் விமானத்தில் பங்களாதேஷ் நாட்டிற்குப் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்தியாவுக்கு, நண்பகலாக இருந்தது. மியான்மார் அரசுத்தலைவரின் பிரதிநிதிகள் குழு விமான நிலையத்தில் திருத்தந்தையை வழியனுப்பி வைத்தது. இயேசு சபையைச் சார்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் செல்லும் நாடுகளில், அச்சபையினரின் இல்லம் சென்று கலந்துரையாடுவது வழக்கம். அதேபோல், யாங்கூனிலும் இயேசு சபையினரைச் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் மியான்மார் திருத்தூதுப் பயண நிறைவு பற்றி, யாங்கூனிலிருந்து எம் நிருபர், இயேசு சபை அருள்பணி சி.அமல் பேசுகிறார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.