2017-11-30 15:41:00

பங்களாதேஷ் நாட்டில் திருத்தூதுப் பயணம், முதல் நாள்


நவ.30,2017. இவ்வியாழன் பங்களாதேஷ் நேரம் மாலை 3 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பகல் 2.30 மணிக்கு, தலைநகர் டாக்கா பன்னாட்டு விமான நிலையம் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். யாங்கூனிலிருந்து டாக்காவுக்கு ஏறத்தாழ 2 மணி 25 நிமிடம் விமானப் பயணம் செய்த திருத்தந்தை, பயணத்திலே மதிய உணவும் உண்டார். டாக்கா பன்னாட்டு விமான நிலையத்தில், பங்களாதேஷ் அரசுத்தலைவர் அப்துல் ஹமித் அவர்கள் திருத்தந்தையை வரவேற்க, மரபு உடைகளில் இரு சிறார் மலர்களைக் கொடுத்தனர். அதோடு ஒரு தட்டில் அந்நாட்டு மண்ணை அச்சிறார் ஏந்த, திருத்தந்தை அம்மண்ணை ஆசீர்வதித்தார்.  மேலும், அரசு அதிகாரிகள், பத்து ஆயர்கள், 25 பொதுநிலை பிரதிநிதிகள் மற்றும், 40 சிறாரும் அங்கு இருந்தனர். அங்கு நடந்த வரவேற்பு நிகழ்வில் மரபு நடனம் ஆடிய சிறார், நடனம் ஆடிக்கொண்டே, திருத்தந்தையை வாகனம் வரை அழைத்துச் சென்றனர்.

டாக்கா விமான நிலையத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Savar தேசிய மறைசாட்சிகள் நினைவிடத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. சாலையெங்கும் மக்கள் வெள்ளெனத் திரண்டு திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றனர். 1971ம் ஆண்டில் பங்களாதேஷ் விடுதலைப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக, 34 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பத்து ஏக்கர்கள் நிலப்பரப்பு பசுமையாக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் எதிர்கொண்ட துன்பங்களை எடுத்துக்காட்டும் விதமாக, இந்நினைவிடத்தை அடைவதற்கு பல்வேறு நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு செயற்கை ஏரியும் உள்ளது. இந்நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். எக்களாம் முழங்கியது. அந்நினைவிடத்தில், தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டு, அமைதித் தோட்டத்தில் ஒரு மரத்தையும் நட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், அங்கிருந்து 35.4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, பங்கபந்து நினைவு அருங்காட்சியகமும் சென்றார் திருத்தந்தை. இவ்விடம், பங்களாதேஷ் நாட்டின் தந்தை என போற்றப்படும், அந்நாட்டின் முதல் அரசுத்தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் நினைவிடமாகும். அந்நாட்டின் விடுதலையைத் தொடர்ந்து, 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாளன்று, முஜிபுர் ரஹ்மான் அவர்களும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் 31 பேரும் கொல்லப்பட்டனர். இவ்விடம், 1997ம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தில், ரஹ்மான் அவர்களின் வாழ்வு பற்றிய மற்றும், சிலரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நினைவிடத்தில், ரஹ்மான் அவர்களின் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் திருத்தந்தையை வரவேற்றனர். அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அமைதியாகச் சிறிது நேரம் செபித்த திருத்தந்தை, தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். இந்நிகழ்வை நிறைவு செய்து அங்கிருந்து 36 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, பங்கபான் அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அரசுத்தலைவரை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசிய திருத்தந்தை, பின்னர், உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு, பங்களாதேஷ் நாட்டின் அரசியல் மற்றும் சமய அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தார். இந்நிகழ்வில் முதலில் அரசுத்தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர், திருத்தந்தையும், பங்களாதேஷ் நாட்டிற்கு தனது முதல் உரையைத் தொடங்கினார். இந்நிகழ்வில் ஏறத்தாழ 400 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்குப் பின்னர், டாக்கா திருப்பீட தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இவ்வியாழன் தின நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

“இறைவனின் மிகவும் புனிதமான பெயர், மனிதர்களுக்கு எதிராக, வெறுப்புணர்வையும், வன்முறையையும் தூண்டுவதற்கு ஒருபோதும் நியாயப்படுத்தப்படக் கூடாது” என்ற சொற்களையும், இவ்வியாழன் காலையில் தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பங்களாதேஷில், கடந்த இரு நாள்களாக, 41 வயது நிரம்பிய கத்தோலிக்க அருள்பணியாளர் வால்ட்டர் வில்லியம் ரொசாரியோ என்பவர் காணாமல் போயுள்ளார். இவர், இத்திருத்தூதுப் பயணத் தயாரிப்புக்களில் மிகவும் ஆர்வமுடன் ஈடுபட்டவர். இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அருள்பணி வால்ட்டர் வில்லியம் ரொசாரியோ அவர்கள், விரைவில் விடுவிக்கப்படட்டும் எனவும் செபிப்போம். பங்களாதேஷில், டிசம்பர் 02, வருகிற சனிக்கிழமை மாலையில் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, உரோம் திரும்புவார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.