2017-11-29 13:39:00

புத்த தலைமைப்பீடத் துறவியருக்கு திருத்தந்தையின் உரை


நவ.29,2017. அன்பு சகோதரர்களே, புத்த மதத்தினருக்கும், கத்தோலிக்கருக்குமிடையே நிலவும் நட்பு, மரியாதை ஆகியவற்றைப் பலப்படுத்த இந்தச் சந்திப்பு உதவுகிறது. ஒவ்வொரு மனிதரின் மாண்பையும், அமைதியையும் உறுதி செய்ய நம்மையே அர்ப்பணிக்கும் நேரம் இது. மியான்மார் மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் மக்களுக்கு, மதத்தலைவர்கள், நம்பிக்கையைத் தரும் வகையில் பேசுவது அவசியம்.

ஒவ்வொரு யுகத்திலும், மனிதர்கள், அநீதிகளையும், மோதல்களையும் அனுபவித்து வருகின்றனர். நாம் வாழும் காலத்தில், இவை, இன்னும் அதிகமாகத் தெரிகின்றன. தொழில்நுட்பங்களில் நாம் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தாலும், வறுமை, இனமோதல்கள் ஆகியவற்றில் அதிகம் காயமுற்று வருகிறோம்.

புத்தமத பாரம்பரியத்திற்கு ஏற்ப, மியான்மாரில் விளங்கும் அனைத்தையும் நான் மதிக்கிறேன். புத்தரின் படிப்பினைகளைப் பின்பற்றி வாழும் ஆண், பெண் துறவியர், பொறுமையுடன் வாழ்வது, வாழ்வை மதிப்பது, இயற்கையைப் போற்றிக் காப்பது ஆகிய குணங்களில் இந்நாட்டு மக்களை வளர்த்து வருகின்றனர்.

அனைத்தையும் கடந்து நிற்கும் உண்மையை நோக்கி மக்களை நடத்திச்செல்வது, நமக்கு முன் இருக்கும் பெரும் சவால். இந்த உன்னத நிலையை நாம் தனித்து அடையமுடியாது; அனைவரும் ஒன்றிணைந்து அடையவேண்டும்.

இதனை எவ்வாறு அடைய முடியும்? புத்தர் வழங்கியுள்ள சொற்கள் நமக்கு வழிகாட்டுகின்றன: "சினம் கொண்டோரை சாந்தத்தால் வெல்க; தீயோரை நன்மைத்தனத்தால் வெல்க; வழங்க மறுப்போரை தாராள குணத்தால் வெல்க; பொய்யரை உண்மையால் வெல்க" (தம்மப்பதா 17, 223). இதையொத்த எண்ணங்களை, அசிசி நகர் புனித பிரான்சிஸ், ஒரு செபத்தின் வழியே கூறியுள்ளார்: "ஆண்டவரே, உமது அமைதியின் கருவியாய் என்னை மாற்றும். வெறுப்பு உள்ள இடத்தில் நான் அன்பை விதைக்கவும், காயமுள்ள இடத்தில் நான் மன்னிப்பைக் கொணரவும், இருளுள்ள இடத்தில் நான் ஒளியை ஏற்றவும், துயரம் நிறைந்த இடத்தில் நான் மகிழ்வூட்டவும் செய்தருளும்."

மோதல்களால் உருவான காயங்களை குணமாக்க, இந்தச் சொற்கள் உதவட்டும். மோதல்களைத் தீர்ப்பது, அனைத்து மக்களின் கடமை என்றாலும், அரசு அதிகாரிகள், மற்றும், மதத்தலைவர்களின் தனிப்பட்ட பொறுப்பு இது. பாங்லாங் அமைதி கருத்தரங்கின் (Panglong Peace Conference) வழியே இந்நாட்டில் தொடர்ந்துவரும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

இந்த முயற்சிகள் முழுப்பலனை அளிப்பதற்கு, மதத்தலைவர்களிடையே கூட்டுறவு மனப்பான்மை அவசியம். அமைதியைக் கொணர்வதற்கு மியான்மார் நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளிலும், கத்தோலிக்கத் திருஅவை பங்கேற்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மதத்தலைவர்களும் கலந்துகொண்ட இருநாள் கருத்தரங்கை, இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் கத்தோலிக்க ஆயர் பேரவை நடத்தியது என்பதை நான் அறிவேன். இத்தகையக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும்.

அன்பு நண்பர்களே, குணமாக்கும் பாதையில், புத்தர்களும், கத்தோலிக்கரும் இணைந்து நடப்பது, இந்நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் நன்மை பயக்கும். அமைதி, குணப்படுத்துதல், கருணை, நம்பிக்கை ஆகிய விதைகளை இந்நாட்டில் விதைக்க தொடர்ந்து பயணிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.