2017-11-28 14:57:00

யாங்கூனில் திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.28,2017. ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற சிறிய நாடாகிய மியான்மாரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு வருவது, அந்நாட்டு கத்தோலிக்கருக்கு ஒரு புதுமையாகவே இருந்து வருகின்றது. நவம்பர் 27, இத்திங்கள் உள்ளூர் நேரம் பகல் 1.22 மணிக்கு, யாங்கூன் சென்றடைந்த திருத்தந்தைக்கு, அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. யாங்கூன் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஆங் சான் சாலை வழியாக, பேராயர் இல்லத்திற்கு திருத்தந்தை சென்ற வழியெல்லாம் மக்கள் வத்திக்கான் மற்றும் மியான்மார் நாடுகளின் கொடிகளை ஆனந்தமாக ஆட்டிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தனர். சீன நாட்டுக் கொடிகள், வேறுபல நாடுகளின் கொடிகள்கூட மக்கள் மத்தியில் காணப்பட்டன. கச்சின், சின், கரேன், ஷான், பமார், Padaung ஆகிய இன மக்களின் பாடல்கள் அதிகமாகக் கேட்டன. யாங்கூன் நகரில், இதர மதத்தினர் ஒதுங்கி நிற்க, அந்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பயணம் செய்து யாங்கூன் வந்திருந்த கத்தோலிக்கர் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். இப்பயணத்தின் முதல் நிகழ்வாக, இத்திங்கள் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மார் இராணுவ அதிபர் Min Aung Hlaing அவர்களை, புனித மரியா பேராலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர், இப்பயண நினைவாக ஒரு பதக்கத்தை திருத்தந்தை பரிசாக அளித்தார். இராணுவ அதிபர், படகு வடிவிலான யாழ் இசைக்கருவியையும், அலங்கரிக்கப்பட்ட அரிசி குடுவை ஒன்றையும் திருத்தந்தைக்கு அளித்தார். இந்நிகழ்வு இப்பயணத்திட்டத்தில் ஏற்கனவே குறிக்கப்படாமல் இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. ரொங்கிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையில், வெளி நாடுகளால் இராணுவ அதிபர்  குறைகூரப்பட்டுவரும்வேளை, திருத்தந்தையின் இச்சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாய் நோக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.