2017-11-28 15:07:00

மியான்மாரின் புதிய தலைநகரில் திருத்தந்தை


நவ.28,2017. நவம்பர் 28, இச்செவ்வாய் திருத்தந்தையின் இப்பயணத்தில் மிகவும் முக்கியமான நாளாகும். “மியான்மாரின் அனைத்து மக்களையும் அரவணைத்துக் கொள்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை அமைப்பதற்கு ஊக்கப்படுத்துகிறேன்” என்ற சொற்களை தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டு இச்செவ்வாய் தின நிகழ்வுகளை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செவ்வாய் காலை பத்து மணிக்கு, யாங்கூன் பேராயர் இல்லத்தில், புத்த, முஸ்லிம் மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளை, ஏறக்குறைய ஒரு மணி நேரம் சந்தித்து கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணத்திட்டத்தில் குறிக்கப்படாத இச்சந்திப்பில், திருத்தந்தையும் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இச்சந்திப்பை முடித்து, உள்ளூர் நேரம் பகல் 1.25 மணிக்கு யாங்கூன் பன்னாட்டு விமான நிலையம் சென்று, மியான்மார் விமானத்தில், நாட்டின் புதிய தலைநகர் NayPyiTawவுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏறக்குறைய ஒரு மணிநேரம் பயணம் செய்து அந்நகரை அடைந்த திருத்தந்தையை, விமான நிலையத்தில், அரசுத்தலைவரின் பிரதிநிதிகள் குழு ஒன்று வரவேற்றது. யாங்கூனுக்கு வடக்கேயுள்ள, NayPyiTaw நகரத்திற்கு வாகனத்தில் சென்றால் நான்கு மணி நேரம் எடுக்கும். NayPyiTaw விமான நிலையத்திலிருந்து 35.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் அழைத்துச் செல்லப்பட்டார் திருத்தந்தை. இம்மாளிகையில் திருத்தந்தைக்கு அரசு வரவேற்பு வழங்கப்பட்டது. அம்மாளிகையின் தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார் திருத்தந்தை. மியான்மார் அரசுத்தலைவர் Htin Kyaw அவர்களை, மரியாதை காரணமாக, தனியாகச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை. அதன்பின்னர், நாட்டின் ஆலோசகரும், வெளியுறவு அமைச்சருமான ஆங் சான் சூச்சி அவர்களையும் தனியே சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் அங்கிருந்து, 11 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று, பிரமாண்டமான பன்னாட்டு கருத்தரங்கு மையத்தில், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் தலைவர்கள், தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

உள்ளூர் நேரம் மாலை 5.15 மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்வில் முதலில் ஆங் சான் சூச்சி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்வுரைக்குப் பின்னர், திருத்தந்தை, மியான்மார் நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார்.  

இந்நிகழ்வை நிறைவு செய்து, எல்லாரையும் வாழ்த்திய திருத்தந்தை, அந்தப் பன்னாட்டு கருத்தரங்கு மையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள NayPyiTaw பன்னாட்டு விமான நிலையம் சென்று, யாங்கூன் நகருக்குப் புறப்பட்டார்.யாங்கூன் பேராயர் இல்லத்தில் இரவுணவு அருந்தி உறங்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இச்செவ்வாய் தின நிகழ்வுகள் நிறைவடைந்தன.  

Nay Pyi Taw புதிய தலைநகரம், ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னர், அந்நாட்டின் முன்னாள் இராணுவ அரசால் உருவாக்கப்பட்டது. அரசரின் உறைவிடமெனப்படும் இந்நகரத்தை தென்கிழக்கு ஆசியாவில் பொருளாதார வல்லமை படைத்த நகரமாக உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இராணுவ அரசு அமைத்தது எனச் சொல்லப்படுகின்றது. 2005ம் ஆண்டில், ஏறத்தாழ ஒரே இரவில், நிர்வாக அலுவலகங்கள், சேமிப்புகள் போன்ற அனைத்தும் யாங்கூனிலிருந்து மாற்றப்பட்டன. 2006ம் ஆண்டில் மாபெரும் இராணுவ அணிவகுப்பின் மூலம், இந்தப் புதிய தலைநகரம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இந்நகரில், வரிசையாக அமைக்கப்பட்டுள்ள அரசு அலுவலகங்களும், பெரிய பெரிய ஆடம்பர பயணியர் விடுதிகளும், பொழுதுபோக்கு பூங்காக்களும் உள்ளன. இந்நகரிலுள்ள கட்டடங்களில் மிக முக்கியமானதாக, Uppatasanti பகோடா உள்ளது. யாங்கூன் Shwedagon பகோடா போன்று அமைக்கப்பட்டுள்ள Uppatasanti பகோடாவில், புத்தரின் ஒரு பல் வைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 29, இப்புதனன்று திருத்தந்தை பயண நிகழ்வுகளை நஇறைவேற்றும் யாங்கூன் நகரம் மியான்மாரின் முன்னாள் தலைநகரமாகும். தென்கிழக்கு ஆசியாவில் பெரிய நகரமான இங்கு, 48 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். Mon இனத்தவரால் 11ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட யாங்கூன் நகரத்தை, 1852ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆக்ரமித்தபின், இதன் பெயரை ரங்கூன் என மாற்றினர். இப்பெயர், 1989ம் ஆண்டில், இராணுவ அரசால் யாங்கூன் என மாற்றப்பட்டது. புத்தமதத்தினருக்கு மிகவும் புனித திருத்தல நகரமாக இது உள்ளது. இங்குள்ள Shwedagon பகோடா, 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பகோடா உள்புறமாக தங்கத்தால் பூசப்பட்டுள்ளது. இங்கு புத்தரின் சில திருப்பண்டங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.        

மியான்மாரில் 87.9 விழுக்காடு தேரவாடா புத்தமதத்தினரும், 6.2 விழுக்காடு கிறிஸ்தவர்களும், 4.3 விழுக்காடு முஸ்லிம்களும், 0.8 விழுக்காடு இயற்கையை வழிபடுகிறவர்களும், இதர மதத்தினரும் வாழ்கின்றனர். கத்தோலிக்கர் 1.27 விழுக்காடு மட்டுமே. கத்தோலிக்கர் சிறுபான்மையாக இருந்தாலும், திருத்தந்தையின் இப்பயண நாள்களில், திருத்தந்தையின் வாகனம் செல்லுமிடமெங்கும் அம்மக்களின் குரல்களே ஓங்கி ஒலித்து வருகின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்திருத்தூதுப்பயணம், அந்நாட்டினருக்கு அமைதி, மற்றும் ஒப்புரவைக் கொண்டுவரும் என்பதே அந்நாட்டினரின் எதிர்பார்ப்பாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.