2017-11-28 15:15:00

ஆங் சான் சூச்சி அவர்களின் வரவேற்புரை


நவ.28,2017. திருத்தந்தையே, அமைதி, தேசிய ஒப்புரவு மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான எங்கள் ஏக்கங்களுக்கும், ஆவல்களுக்கும், நம்பிக்கையையும், வலிமையையும் கொண்டு வந்துள்ளீர்கள். நீதியான சுதந்திரத்திலிருந்து விலகாதிருப்போம் என்று, எங்களது தேசியப் பண் கூறுகின்றது. மியான்மார் எதிர்கொள்ளும் சவால்கள் பல. அவை ஒவ்வொன்றும், வலிமை, பொறுமை, துணிவு ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கின்றது. பன்மைத்தன்மை கொண்ட எங்கள் நாட்டில் பன்மைத்தன்மையின் அழகைக் கொண்டுவரும் நோக்கத்தை அரசு கொண்டிருக்கின்றது. மனித உரிமைகளைப் பாதுகாத்து, சகிப்புத்தன்மையைப் பேணி, அனைவருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முயற்சிக்கின்றது. திருத்தந்தையே, மியான்மாரிலுள்ள உங்கள் திருஅவையின் பிள்ளைகள், எங்கள் நாட்டின் பிள்ளைகளுமாவார்கள். தாங்கள், இந்நாட்டிற்காகவும், உலகினருக்காவும் செபிப்பது போன்று, தலத்திருஅவையும் செபிக்கின்றது. அதற்காக நன்றி சொல்கிறோம். எங்களுக்குமுன் உள்ள பாதை மிகவும் நீளமானது. ஆயினும், அமைதி, அன்பு, மகிழ்வு ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து உறுதியுடன் பயணிக்கின்றோம். இவ்வாறு உரையாற்றிய ஆங் சான் சூச்சி அவர்கள், இறுதியில் இத்தாலியிலும் கடைசி சொர்களைக் கூறி, வரவேற்புரையை நிறைவு செய்தார். நொபெல் அமைதி விருது பெற்றுள்ளவரான ஆங் சான் சூச்சி அவர்களை, அந்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ‘The Lady’ என்றே அழைக்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.