2017-11-27 16:01:00

மியான்மார் திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, கர்தினால் போ


நவ.27,2017. மீட்பரைக் காண்பதற்கு, கீழ்த்திசை ஞானிகள் ஆவல் கொண்டிருந்ததைப் போல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைக் காண்பதற்கு, மியான்மார் மக்கள் மிகுந்த ஆவல் கொண்டுள்ளனர் என்று, யாங்கூன் பேராயர், கர்தினால் சார்லஸ் முவாங் போ அவர்கள், கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மியான்மாரில் மேற்கொண்டுள்ள திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, கர்தினால் போ அவர்கள், எழுதியுள்ள ஒரு கட்டுரை, "பூமியின் அனைத்து வண்ணங்களும் தங்கமாக..." என்ற தலைப்பில், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் வெளியாகியுள்ளது.

சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோரைத் தேடிச்செல்லவும், ஆடுகளின் நறுமணத்தை மேய்ப்பர்கள் உணரவும் வேண்டுமென்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் ஒரு சிறு மந்தையைத் தேடி வருவது மகிழ்வை அளிக்கிறது என்று கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.

மியான்மார் நாட்டின் சமுதாயம் குறித்தும், அங்கு கிறிஸ்தவ மறை ஆரம்பமானதன் வரலாறு குறித்தும் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், தங்கள் நாட்டைவிட்டு பல்லாயிரம் பேர் புலம்பெயர்ந்து செல்லும் இன்றையச் சூழலில், திருத்தந்தை அங்கு செல்வது, மனதுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

'சுவர்ண பூமி' அதாவது, தங்க நாடு என்றழைக்கப்படும் மியான்மார், இந்தியா, சீனா என்ற இரு பெரும் நாடுகளிடையே அமைந்துள்ளது என்பதையும், இந்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதையும் கர்தினால் போ அவர்கள் தன் கட்டுரையில் எடுத்துரைத்துள்ளார்.

உலகின் கவனத்தை ஈர்க்குமளவு மியான்மார் நாடு காயப்பட்டிருக்கும் வேளையில், கியூபா, கொலம்பியா ஆகிய நாடுகளில் அமைதியைக் கொணர்வதற்காக உழைத்த திருத்தந்தை, தங்கள் நாட்டுக்கு வருகை தருவது, தங்கள் நாட்டிலும் அமைதியைக் கொணரும் என்று தான் நம்புவதாக, யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள் தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.