2017-11-27 15:33:00

திருத்தந்தை பிரான்சிஸ் : மியான்மாரில் முதல் நாள் நிகழ்வு


நவ.27,2017. பர்மா என்றும் அறியப்படும் மியான்மார், தென்கிழக்கு ஆசியாவில் இறையாண்மையுடன் விளங்கும் நாடாகும். இந்தியாவை, ஓர் எல்லையாகக் கொண்டுள்ள இந்நாடு, உலகளாவிய கத்தோலிக்கத் தலைவர் ஒருவரை, முதல் முறையாக, தனது மண்ணில் வரவேற்ற ஆனந்தத்தில் விழாக் கோலம் கொண்டுள்ளது. “நான் மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு, இன்று இரவு திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குகிறேன், அந்நாடுகளில் எனது பிரசன்னம், நெருக்கம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக அமைய வேண்டுமென்று செபியுங்கள்” என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு இரவு 10.10 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஆல் இத்தாலியா A-330 விமானத்தில், மியான்மாருக்குப்  புறப்பட்டார். இப்பயணத்தின் ஆரம்பத்தில், தன்னுடன் பயணம் செய்த, பல நாடுகளின் ஏறத்தாழ ஐம்பது செய்தியாளர்களிடம், என்னோடு பயணம் செய்வதற்கு நன்றி, உங்களின் பணிகள் எப்போதும் நல்ல பலன்களைக் கொண்டு வருகின்றது, உங்களுக்கு என் வாழ்த்து என்று சொன்னார் திருத்தந்தை. மியான்மார் அதிக வெப்பமாக இருக்கும் என்று சொல்கிறார்கள், பரவாயில்லை, இப்பயணம் அந்நாட்டு மக்களுக்குப் பலனுள்ளதாக அமைய வேண்டும் என்றும் சொன்னார் திருத்தந்தை. மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கான, இத்திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், இஞ்ஞாயிறு மாலையில் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, உரோம் மக்களுக்கு சுகமளிக்கும், Salus Populi Romani அன்னை மரியாவிடம் செபித்து, இப்பயணத்தை அன்னையிடம் அர்ப்பணித்தார். மேலும், இந்த நீண்ட திருத்தூதுப் பயணத்தில் தான் கடந்து சென்ற, இத்தாலி, குரோவேஷியா, போஸ்னியா-எர்செகொவினா, மொந்தேநெக்ரோ, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு, வாழ்த்தும், ஆசீரும், செபமும் அடங்கிய தந்திச் செய்திகளையும் அனுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மியான்மார் நாட்டின் பெரிய நகரமும், முன்னாள் தலைநகருமான யாங்கூன் பன்னாட்டு விமான நிலையத்தை, நவம்பர் 27, இத்திங்கள் உள்ளூர் நேரம் பகல் 1.22 மணிக்குச் சென்றடைந்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய - இலங்கை நேரம் பகல் 12.22 மணியாகும். மியான்மார் திருப்பீடத் தூதர் பேராயர் Paul Tschang In-Nam அவர்கள், விமானத்திற்குள்ளே சென்று, திருத்தந்தையை வரவேற்று அழைத்து வந்தார்.     விமான நிலையத்தில், மியான்மார் பிரதமர் Htin Kyaw அவர்கள், திருத்தந்தையை அதிகாரப்பூர்வமாக வரவேற்றார். மேலும், அங்கு, அந்நாட்டின் ஆயர்களும், மரபு உடைகளில் நூறு சிறாரும், பல்வேறு இன மக்களும் திருத்தந்தையை வரவேற்றனர். திருத்தந்தை சிறாரை அரவணைத்தும், கைகுவித்தும் வாழ்த்தினார். 21 துப்பாக்கிகள் முழங்க இடம்பெற்ற வரவேற்புக்குப் பின்னர், யாங்கூன் பேராயர் இல்லத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. திருத்தந்தை சென்ற சாலையின் இரு பக்கங்களிலும், ஆயிரக்கணக்கணக்கில் மக்கள், வத்திக்கான் மற்றும் மியான்மார் நாடுகளின் கொடிகளை வைத்துக்கொண்டு திருத்தந்தையை வாழ்த்தி, மகிழ்ந்தனர். அவ்வில்லத்தில், தனியாகத் திருப்பலி நிறைவேற்றி, இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை. நவம்பர் 28, இச்செவ்வாயன்று, மியான்மாரின் புதிய தலைநகரான NayPyiTaw சென்று, பயண நிகழ்வுகளை நிறைவேற்றும் திருத்தந்தை, அன்று மாலையில் யாங்கூன் நகருக்குத் திரும்புவார். நவம்பர் 30ம் தேதி மதியம் வரை, யாங்கூனில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றிய பின்னர், பங்களாதேஷ் நாட்டிற்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.