2017-11-27 16:02:00

சுயநலத்தை வளர்க்கும் உலகப் படிப்பினைகளுக்கு மாற்றாக...


நவ.27,2017. ஒருவர் ஒருவரோடு கொள்ளும் உறவில் துவங்கி, சமுதாய, பொருளாதார, அரசியல், கலாச்சார, ஊடகத் தளங்கள் அனைத்திலும், உண்மையான அன்புடன் ஈடுபட, ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைப்பு பெற்றுள்ளார் என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

நவம்பர் 23, கடந்த வியாழன் முதல், 26 இஞ்ஞாயிறு முடிய, இத்தாலியின் வெரோனா நகரில், திருஅவையின் சமுதாயக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவின் இறுதித் திருப்பலியை தலைமையேற்று நடத்திய கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்து அரசர் திருவிழாவைச் சிறப்பிக்கும் வேளையில், அந்த அரசரின் அன்பு, அயலவருக்குக் காட்டும் அக்கறையில் வெளிப்பட்டதை, இன்றைய நற்செய்தி உணர்த்துகிறது என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

அனைத்தும் உலகமயமாகிவரும் இன்றையச் சூழலில், கிறிஸ்துவின் வாழ்வை வரவேற்று, கொண்டாடுவது, இவ்வுலகிற்கு நாம் காட்டக்கூடிய வெளிப்படையான சாட்சி என்றும், விடுதலை, உடன்பிறந்த உணர்வு, சமூக நீதி ஆகியவற்றை வளர்ப்பது நம் கடமை என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

சுயநலத்தை வளர்க்கும் இவ்வுலகப் படிப்பினைகளுக்கு ஒரு மாற்று அடையாளமாக, திருஅவையின் சமுதாய படிப்பினைகள் அமைந்துள்ளன என்று, கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.