2017-11-25 15:45:00

காங்கோ சனநாயக குடியரசுக்கு திருத்தந்தை உதவி


நவ.25,2017. ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயக குடியரசில், பல மாதங்களாக இடம்பெற்ற கடும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசரகால உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

காங்கோ குடியரசின் Grand Kasai பகுதியில் இடம்பெற்ற கடும் வன்முறையில், 3,400க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் மற்றும், பெரும் பொருளாதார அழிவும் ஏற்பட்டுள்ளது.  

இவ்வியாழன் மாலையில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், தென் சூடான், காங்கோ குடியரசு ஆகிய நாடுகளில் அமைதி நிலவுவதற்காக நடத்தப்பட்ட செப வழிபாட்டில், காங்கோவிற்கு உதவி செய்வது குறித்து அறிவித்தார், திருத்தந்தை.

திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின் வழியாக செய்யப்படும் இந்த உதவி, அந்நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட மறைமாவட்டங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், பல்வேறு ஆயர் பேரவைகள் மற்றும், பல்வேறு அமைப்புகள், இத்தகைய உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.