2017-11-24 15:13:00

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட யுனிசெப் அழைப்பு


நவ.24,2017. உலகில் ஏதாவது ஓரிடத்தில், ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும், ஒரு பெண் குழந்தை அல்லது ஒரு சிறுமி வன்முறையால் இறக்கும்வேளை, பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட, உலக சமுதாயம் குரல் எழுப்ப வேண்டுமன்று, யுனிசெப் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் இளவயது திருமண வாழ்வு உட்பட பல்வேறு சூழல்களில், பெண் குழந்தைகளும், சிறுமிகளும் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள், அவர்களின் நலவாழ்வுக்கு கேடு வருவிக்கின்றது என்றும், யுனிசெப் நிறுவனத்தின் இத்தாலிய கிளை கூறியுள்ளது.

நவம்பர் 25, இச்சனிக்கிழமையன்று, உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, அறிக்கை வெளியிட்டுள்ள இத்தாலிய யுனிசெப் கிளை, உலகில் 15க்கும், 19 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய ஒரு கோடியே ஐம்பது இலட்சம் வளர்இளம் பெண்கள், தங்கள் வாழ்வில் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

28 நாடுகளில் எடுத்த ஆய்வின்படி இவ்வாறு தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இந்த அமைப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை, கடும் மனித உரிமை மீறலாகும் என்றும், தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

‘யாரையும் ஒதுக்கிவிடாமல்’ என்ற தலைப்பில், 2017ம் ஆண்டின் உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.