2017-11-24 15:24:00

தென் சூடான், காங்கோ குடியரசுக்காக திருத்தந்தை செபம்


நவ.24,2017. உலகில், குறிப்பாக, தென் சூடான், காங்கோ சனநாயகக் குடியரசு ஆகிய இரு நாடுகளில் அமைதி நிலவ வேண்டுமென்று, இவ்வியாழன் மாலையில் உருக்கமாகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்விரு நாடுகளின் அமைதிக்காக, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், இவ்வியாழன் மாலையில் நடந்த செப வழிபாட்டைத் தலைமையேற்று நடத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, இவ்விரு நாடுகளுக்கும் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள இயலாவிடினும், அந்நாடுகளுக்கு செபம் மிகவும் முக்கியமானது மற்றும் அது மிகவும் வல்லமைமிக்கது என்று கூறினார்.

செபம், கடவுளின் வல்லமையால் செயலாற்றுகின்றது, கடவுளால் இயலாதது எதுவுமே இல்லை என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, இவ்விரு நாடுகளில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார்.

ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களுடன் தென் சூடானுக்கு, இவ்வாண்டில், திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள விரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆனால், அந்நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களால் அப்பயணம் நிறுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கும் அமைதி நிலவுவதற்காக கிறிஸ்தவர்கள் செபிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், தென் சூடானோடு ஒருமைப்பாடு என்ற அமைப்பு, உலகளாவிய மத நிறுவனங்களின், நீதி மற்றும் அமைதி அவையின் ஒத்துழைப்புடன், இச்செப நிகழ்வை நடத்தியது.

2011ம் ஆண்டு ஜூலை 9ம் தேதியன்று, சூடானிலிருந்து பிரிந்து தனி நாடாகிய தென் சூடானில், 2013ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுச் சண்டையில், ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் இறந்துள்ளனர் மற்றும் 35 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். இந்நாட்டில், பெரிய இனக்குழுக்கள் மட்டும் அறுபதுக்கும் அதிகம் என்று செய்திகள் கூறுகின்றன.

மேலும், ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்டிருக்கும், காங்கோ சனநாயகக் குடியரசில், அரசுத்தலைவர் தேர்தல் தள்ளிப்போடப்பட்டுள்ளதால், அந்நாடும் கடும் பதட்டநிலைகளைச் சந்தித்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.