2017-11-24 15:12:00

இரக்கம்நிறை ஆண்டவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை


நவ.24,2017. இரக்கம்நிறை ஆண்டவர், தம் சகோதர, சகோதரிகளை ஒருபோதும் கைவிடுவதில்லை, அதேநேரம், அவர்களின் காயங்களை, தம் காயங்களுடன் இணத்துக்கொள்கிறார் என்பதை, சிலுவை அடையாளம் தொடர்ந்து நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  இவ்வெள்ளியன்று கூறினார்.

கத்தோலிக்க மற்றும், கீழை வழிபாட்டுமுறை அசீரியத் திருஅவைகளின் இறையியல் கலந்துரையாடல் குழுவின் உறுப்பினர்களை, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அருளடையாள வாழ்வு குறித்து, இக்குழு அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டு, வெளியிடுவது குறித்த மகிழ்வையும் தெரிவித்தார்.

கத்தோலிக்க மற்றும், கீழை வழிபாட்டுமுறை அசீரியத் திருஅவைகள், ஒரே பீடத்தில்  முழு ஒன்றிப்பைக் கொண்டாடும் நாளுக்காக, இந்த இறையியல் உரையாடல் குழு தொடர்ந்து உழைப்பதற்கு, தான் செபிப்பதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதிய அறிக்கையில், அனைத்து அருளடையாளக் கொண்டாட்டங்களில், ஒற்றுமையின் வெளிப்படையான அடையாளமாக சிலுவை அடையாளம் குறிப்பிடப்பட்டிருப்பதை வலியுறுத்த விரும்புவதாகக் கூறியத் திருத்தந்தை, அசீரியத் திருஅவை மரபில், சிலுவையிலுள்ள கிறிஸ்து, நல்ல மருத்துவராகவும், வாழ்வின் மருந்தாகவும் நோக்கப்படுவது பற்றியும் குறிப்பிட்டார்.

ஏனைய கிறிஸ்தவ சபைகளைப் போலவே அசீரியத் திருஅவையின் கிறிஸ்தவர்களும் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி, புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் கவலை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசீரியக் கிறிஸ்தவர்கள், தாங்கள் வாழ்கின்ற இடங்களில், அனைவரையும் முழுமையாக மதித்து, அமைதி மற்றும் ஒப்புரவுக்காகத் தொடர்ந்து உழைப்பார்கள் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.