2017-11-22 15:34:00

மோதல்கள், நவீன அடிமைத்தனத்தை வளர்க்கின்றன - பேராயர் அவுசா


நவ.22,2017. பொருளாதாரம், சுற்றுச்சூழல், அரசியல் மற்றும் நன்னெறி ஆகிய தளங்களில் தன் வேர்களைக் கொண்டிருக்கும் நவீன அடிமைத்தனத்தை முற்றிலும் அகற்ற அனைத்துலக சமுதாயம் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. தலைமையக கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்றுவரும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. பாதுகாப்பு அவை, இச்செவ்வாயன்று மேற்கொண்ட ஒரு கருத்து பரிமாற்றத்தில், இவ்வாறு கூறினார்.

"பன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்தல்: மோதல்கள் சூழலில் மனித வர்த்தகம்" என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், உலகில் நிலவும் மோதல்கள், நவீன அடிமைத்தனத்தை வளர்க்கின்றன என்று பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

நவீன அடிமைத்தனம் மற்றும் மனித வர்த்தகம் என்ற கொடுமைகளின் பல்வேறு வடிவங்களுக்கு எதிராக போராடிவரும் பல சமய அமைப்புக்களின் முயற்சிகளை திருப்பீடம் பாராட்டுகிறது என்று கூறிய பேராயர் அவுசா அவர்கள், இந்தக் கொடுமையை முற்றிலும் அகற்ற பன்னாட்டு அரசுகளும், உலக அமைப்புக்களும் தீவிரமுயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.