2017-11-22 15:38:00

அடிமைத்தனம், 21ம் நூற்றாண்டில் தொடர்வது, பெரும் அவமானம்


நவ.22,2017. நலிவுற்ற மக்கள், மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோரை வேட்டையாடிவரும் குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் தடுத்து நிறுத்துவது அரசுகளின் அவசர கடமை என்று ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில், ஐ.நா. பாதுகாப்பு அவை, இச்செவ்வாயன்று மேற்கொண்ட ஒரு கூட்டத்தில் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், அடிமைத்தனமும், மனித உரிமை மீறல்களும் 21ம் நூற்றாண்டில் தொடர்வது நம் அனைவருக்கும் பெரும் அவமானம் என்று கூறினார்.

பாலியல் கொடுமைகள், கொத்தடிமைத்தனம், உடல் உறுப்புக்களை நீக்குதல் ஆகிய பல்வேறு வடிவங்களில், நவீன அடிமைத்தனம், இவ்வுலகில் நிலவுகிறது என்பதை, கூட்டேரஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

உலகின் பல நாடுகளில் நிலவும் மோதல்கள் காரணமாக, 2016ம் ஆண்டு, 6 கோடியே 56 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் என்றும், இரண்டாம் உலகப் போருக்குப் பின், இதுவே மிகவும் உயர்ந்ததோர் எண்ணிக்கை என்றும் ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.