2017-11-21 15:30:00

திருப்பீடத் தூதரகப் பணியாளர்களுக்கு புதிய தனி அலுவலகம்


நவ.21,2017. திருப்பீடத் தூதரகப் பணிகளில் ஈடுபட்டுள்ளோருடன் திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயலகத்தின் நெருக்கத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்த உதவும் நோக்குடன், திருப்பீடச் செயலகத்திற்குள்ளேயே புதிய துறை ஒன்றை துவக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத் தூதரகப் பணியாளர்களின் பிரதிநிதியாக பணியாற்றிவரும் பேராயர் Jan Romeo Pawlowski அவர்களின் கீழ் இந்தப் புதிய துறை செயல்படும் எனவும், இவர் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் திருப்பீடத் தூதரகங்களுக்கு அவ்வப்போது சென்று பணியாளர்களைச் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீடத் தூதரகப் பணியாளர்கள், மற்றும் திருப்பீடப் பணிக்கு தங்களைத் தயாரித்து வருவோர் குறித்த விவகாரங்களில் உதவ உள்ள இவ்வலுவலகம், முழு சுதந்திரத்துடனும் அதேவேளை, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் ஒத்துழைப்புடனும் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீடச் செயலரின் தலைமையின் கீழ், பன்னாட்டு உறவுகள் துறை நடத்தும் வாரந்திரக் கூட்டங்களில், திருப்பீடத் தூதரகப் பணியாளர்களின் பிரதிநிதி பங்கேற்பதுடன், திருப்பீடத் தூதரகப் பணி தொடர்பான பாப்பிறைக் கழகத் தலைவருடன் இணைந்து, புதியவர்களைத் தேர்வு செய்வதிலும், அவர்களுக்குப் பயிற்சி வழங்குவதிலும்  ஈடுபடுவார் எனவும், திருப்பீடச் செயலகம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.