2017-11-21 15:09:00

அன்னை மரியாவின் புன்னகை நம் மகிழ்வின் ஊற்று


நவ.21,2017. “வாழ்வின் துன்பங்களை நாம் எதிர்கொள்ளும்வேளையில், அன்னைமரியின் தூய்மையும், எளிமையும் நிறைந்த புன்னகை, நம் ஒவ்வொருவர் மகிழ்வின் ஊற்றாக அமைவதாக” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்செவ்வாயன்று வெளியாயின.

அன்னை மரியா ஆலயத்தில் நேர்ந்தளிக்கப்பட்ட விழாவாகிய நவம்பர் 21, இச்செவ்வாயன்று, நம் துன்பநேரங்களில் அன்னை மரியாவை நோக்குமாறு திருத்தந்தை தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

மூன்று வயதில் ஆலயத்தில் நேர்ந்தளிக்கப்பட்ட அன்னை மரியா, தனது 12வது வயதுவரை ஆலயத்தில் வளர்ந்தார். எருசலேமில் அழிக்கப்பட்ட ஆலயத்துக்கு அருகில், பைசான்டின் பேரரசர் முதலாம் ஜஸ்டீனியன், கி.பி.543ம் ஆண்டில் புனித மரியா ஆலயம் ஒன்றை எழுப்பினார். இந்த ஆலயம் திருப்பொழிவு செய்யப்பட்டதையொட்டி, அன்னை மரியா ஆலயத்தில் நேர்ந்தளிக்கப்பட்ட விழா, கிறிஸ்தவத்தில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இத்தாலியின் ரெஜ்ஜியோ கலாபிரியா-போவா மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி Enzo Petrolino அவர்கள், “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணத்தில் தியோக்கோன் அழைப்பு : ஏழைகளுக்கான ஏழைத் திருஅவை” என்ற தலைப்பில் எழுதியுள்ள புதிய நூல் ஒன்றுக்கு, முன்னுரை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனோஸ் அய்ரெஸ் உயர்மறைமாவட்டத்தில் பேராயராகப் பணியாற்றியது முதல், உரோம் ஆயராக, அண்மைக் காலங்களில் தியோக்கோன் இறையழைப்பு பற்றிக் கூறியுள்ள பல்வேறு கூற்றுக்களை இந்நூல் கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.