2017-11-20 15:28:00

வாரம் ஓர் அலசல் – அன்பில் முதலீடு செய்வோம்


நவ.20,2017. இம்மாதம் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஈரான், ஈராக் எல்லைப் பகுதியில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்திற்குப் பின், ஊடகங்கள் வெளியிட்டிருந்த ஒரு காணொளிச் செய்தி நம் நெஞ்சை உருக வைத்தது. நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இடர்துடைப்புப் பணியாளர்கள் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில், ஈரான் நாட்டு மூன்று, நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன், அவனுக்கும் இளைய ஒரு சிறுமியைப் பணியாளர்களிடம் அழைத்துக்கொண்டுபோய், நீங்கள் இவளுக்கு உணவு கொடுக்கவில்லை என்று சொல்ல, அவர்களும், அச்சிறுமிக்கு, இல்லை, அக்குழந்தைக்கு உணவு பொட்டலத்தையும், குளிர்பானத்தையும் கொடுத்தனர். பின் அச்சிறுமியை அரவணைத்து திரும்பிக் கொண்டிருந்த அச்சிறுவன், தனக்குரிய உணவுப் பொட்டலம் பற்றிக் கேட்கவில்லையே என்பதை உணர்ந்த அப்பணியாளர்கள், அச்சிறுவனை அழைத்து, அவனுக்கும் அவற்றைக் கொடுத்து, அன்போடு கன்னத்தில் தட்டி பாராட்டி அனுப்பினர். தனக்கு உணவு இல்லையென்றாலும் பரவாயில்லை, அடுத்தவர் பசியாய் இருக்கக் கூடாது என்ற, அந்த பிஞ்சு உள்ளத்தின் செயல், “உங்கள் அன்பு சொற்களில் அல்ல, செயல்களில் விளங்கட்டும்” என்ற தலைப்பில், நவம்பர் 19, இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட முதல் உலக வறியோர் நாளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட செய்தியையே நினைவுபடுத்துகின்றது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இலவசமாக சிகிச்சை அளித்துவரும், 84 வயது நிரம்பிய டாக்டர் வி.இராமமூர்த்தி அவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். 1958ம் ஆண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்த இவர், ஓய்வு நேரங்களில் சுற்றுவட்டாரங்களிலுள்ள கிராமங்களுக்கு நடந்தே சென்று மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார். ஓய்வுபெற்றபின், இவர் தனது வீட்டிலேயே மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். தன்னிடம் வரும் நோயாளர்களிடம் மருத்துவ கட்டணம் என, எதையுமே இவர் கேட்பதில்லை. தொடக்கத்தில் ஒரு ரூபாயை அவரின் மேஜையில் வைத்துவிட்டுச் சென்ற மக்கள், தற்போது விலைவாசி ஏற்றத்தை மனதில்கொண்டு, அவர்களாகவே ஐந்து ரூபாய் வைக்கின்றனர். இந்த ஐந்து ரூபாயை வைக்காமலே செல்லும் நோயளர்களும் உள்ளனர். கைராசி மருத்துவர் என்று பெயர்பெற்றிருக்கும் இவரிடம், வெளியூர்களிலிருந்து செல்வந்தர்களும் வாகனங்களில் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர். இவர் யாரிடமும் மருத்துவ கட்டணமாக எந்தத் தொகையையும் நிர்ணயிப்பதில்லை. சிறுநீரக மருத்துவ நிபுணரான இவரது மகன் ஸ்ரீனிவாசன் அவர்களும், தந்தைவழியைப் பின்பற்றி, சென்னை தில்லைநகரில், குறைந்த கட்டணத்திற்கே சிகிச்சை அளித்து வருகிறாராம். தனது இந்த மருத்துவப் பணி பற்றிச் சொல்லும் டாக்டர் இராமமூர்த்தி அவர்கள், “நிறைய பணம் சம்பாதித்து என்ன செய்யப் போகிறேன், கிடைக்கின்ற பணமே போதும்” என்று சொல்லியிருக்கிறார். ஒருவர் என்ன படித்திருந்தாலும், எப்பொழுது அவர் அடுத்தவர் பசியை உணரக்கூடிய அறிவைப் பெறுகின்றாரோ அன்றுதான் அறிவு பெற்றவராகிறார் என்று சொல்வார்கள். இவ்வாறு, அறிவு பெற்றுள்ள பல இராமமூர்த்திகள் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது, ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது என்ற இயேசுவின் அருள்வாக்கே நம் வாழ்த்தாக வருகின்றது.

உலக மக்கள் சேவை மையம் என்ற அமைப்பைத் துவக்கியுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த 31 வயது நிரம்பிய மணிமாறன் என்பவரின், தலைமையிலான குழுவினர், தமிழகம் முழுவதும் தெரு ஓரங்களில் உள்ள தொழு நோயாளர்கள், அனாதையாக இருக்கும் முதியோருக்கு சிகிச்சை அளிக்கின்றனர். தொழு நோயாளர்கள் மற்றும், முதியோர்களின் கை, காலில் உள்ள புண் மற்றும் காயங்களைத் துடைத்து மருந்து தடவுகின்றனர். நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களை அழைத்துச் சென்று, காப்பகங்களில் ஒப்படைக்கின்றனர். அவர்களுக்கு, போர்வைகள், உணவு, புடவை, வேட்டி, சட்டைகள் வழங்குகின்றனர். அனாதையாக இறந்த தொழு நோயாளிகள் 350 பேரை நல்லடக்கம் செய்துள்ளனர். இந்தச் சேவைக்காக, மணிமாறன் அவர்கள், மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார் என்று, தினமலர் தினத்தாளில் வாசித்தோம்.

கப்புச்சின் துறவு சபையைச் சார்ந்த அருள்பணி Solanus Casey அவர்கள், நவம்பர் 18, கடந்த சனிக்கிழமை மாலையில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Detroit நகரில் முத்திப்பேறுபெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த மகானும், நோயாளர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், வீடற்றவர் போன்றோர் மீது மிகவும் அன்புசெலுத்தியவர். இந்த மக்களுக்கு மதிய உணவு அளிக்க வேண்டும் என்பதற்காகவே, இவர் தனது உணவைத் தியாகம் செய்து நோன்பு இருந்திருக்கிறார். இவருக்கு கல்வி ஞானம் குறைவு என்பதால், சாதாரண வேலையே கொடுக்கப்பட்டது. அதோடு, திருப்பலி நிறைவேற்றுவதைத் தவிர, மறையுரைகள் ஆற்றவோ, ஒப்புரவு அருளடையாளம் கேட்பதற்கோ இவர் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இவர் வாழும்போதே புதுமைகள் செய்துள்ளார். ஒருமுறை, ஏழைகளுக்குப் உணவு பரிமாறப்படும்வேளையில் உணவு தீர்ந்துவிட்டது. கதவருகில் நூற்றுக்கணக்கான ஏழைகள் பசியோடு உணவுக்காகக் காத்து நின்றனர். இதைக் கவனித்த அருள்பணி Solanus Casey அவர்கள், உடனே, ‘எங்கள் வானகத்தந்தையே’ என்ற செபத்தை, சப்தமாகச் செபிக்கத் தொடங்கினார். அந்நேரமே அந்த அறைக்கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால், ஒரு ரொட்டிக்கடைக்காரர், கூடை நிறைய ரொட்டிகளையும், மற்ற உணவுப் பொருள்களையும் வைத்துக் கொண்டு நின்றார். இதைப் பார்த்த மக்கள், ஆனந்தக் கண்ணீர் விட்டனர். அப்போது அருள்பணி Solanus அவர்கள், அம்மக்களிடம், பார்த்தீர்களா? கடவுள் நமக்கு வழங்குகிறார். நாம் இறைபராமரிப்பில் நம்பிக்கை வைத்தால் யாருமே துன்புறமாட்டார்கள் என்று கூறினார்.

1941ம் ஆண்டில் ஒருநாள், கப்புச்சின் சபையில் நவதுறவு பயிற்சியில் இருந்த ஒருவர் பல்வலியால் கஷ்டப்பட்டார். மருத்துவரிடம் சகிச்சைக்குச் சென்று தாமதமானால் அவர் மீண்டும் பயிற்சியை முதலிலிருந்து துவக்க வேண்டுமென்பது அன்றைய நிலை. அதனால் அவர், அருள்பணி Solanus அவர்களிடம் சென்று ஆசீர் கேட்டார். எல்லாம் நலமாக முடியும் என்று அனுப்பி வைத்தார். அவர் பல் மருத்துவரிடம் சென்ற சமயம், ஒரு பெண் மருத்துவர் அருள்பணி Solanus அவர்களைப் பார்க்க வந்தார். அப்போது இரு கப் ஐஸ்கிரீம் வாங்கிவந்து சாப்பிடச் சொன்னார். இவரும் தனது மேஜைக்குள் அவற்றை வைத்துவிட்டார். அது கடும் கோடைகாலம். ஆனால் அந்த நவதுறவி பல்மருத்துவ சிகிச்சை நல்லவிதமாக முடிந்து மகிழ்வுடன் இவருடன் வந்தார். சரி. இந்த மகிழ்வைக் கொண்டாடு என்று ஐஸ்கிரீ கப்களை எடுத்தார். அது மூன்று கப்களாக, இளகாமல் இருந்ததாம். அருள்பணி Solanus அவர்கள் இறந்த பின்னர், ஒரு பெண் இவரது செபத்தால் அற்புதமாய் குணம் பெற்றுள்ளார். இவர் 19870ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டு விஸ்கான்சின் நகரில், அயர்லாந்து பெற்றோருக்குப் பிறந்தவர். இவர் வயலின் இசைக்கருவி பிரியர்.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் முதல் உலக வறியோர் நாள் திருப்பலியை இஞ்ஞாயிறு காலையில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாலந்து உவமை பற்றி ஆற்றிய மறையுரை, நம் வாழ்வைப் பரிசோதிக்க வைக்கின்றது.  உரோம், லாட்சியோ மாநிலம், பாரிஸ், லியோன், வார்சா, கிரக்கோவ், பிரசல்லஸ், லக்சம்பர்க், Nantes ஆகிய இடங்களிலிருந்து வந்திருந்த நான்காயிரத்துக்கு மேற்பட்ட ஏழைகள் இத்திருப்பலியில் பங்குகொண்டனர். ஏழைகள்மீது அக்கறை காட்டுவது, நற்செய்தி சார்ந்த கடமை, ஏனென்றால், ஏழைகளே உண்மையான செல்வந்தர்கள், நாம் என்ன வைத்திருக்கின்றோம் என்பதல்ல, ஆனால் நாம் என்ன கொடுக்கின்றோம் என்பதே முக்கியம். ஏழைகளுக்கு எதிரான மாபெரும் பாவம், புறக்கணிப்பாகும். இது தேவையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கு நம் முதுகை காட்டுவதாகும். கடவுளின் கண்களில் எந்த ஒரு குழந்தையும் புறக்கணிக்கப்படுவதில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நீதியுடன் நடந்துகொள்கிறேன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, பிறரைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பதை கடவுள் விரும்பவில்லை. ஆனால், ஏதாவது நன்மை செய்தாயா என்றுதான் கடவுள் கேட்பார். ஏழைகளில் கடவுள் நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார். அவர் நம் அன்புக்காகத் தாகம் கொண்டிருக்கின்றார். ஏழைகளில் இறைவனின் பிரசன்னத்தை நாம் காண்கிறோம். ஏழைகள் மீது அக்கறை காட்டுவது, அவர்களுக்கு உணவு கொடுப்பது மட்டுமல்ல, அவர்களோடு இறைவார்த்தையையும் பகிர்ந்துகொள்வதாகும். ஏழைகளை அன்புகூர்வது என்பது, எல்லாவிதமான ஆன்மீக, மற்றும் பொருளாதார ஏழ்மையை ஒழிப்பதாகும். நாம் ஏழைகளை நெருங்கிச் செல்லச் செல்ல, அந்நிலை நம் வாழ்வையும் உணரவைக்கும். இந்த உலகில், நாம் அன்பில் எதைச் சம்பாதிக்கின்றோமோ, அதைத் தவிர மற்ற எல்லாமே கடந்து செல்லும். எனவே. நாம் எங்கே நம் முதலீடுகளைப் போடுகிறோம் என்று சிந்திப்போம். வார்த்தைகளில் அல்ல, செயல்களில் அன்புகூரும் துணிச்சலைப் பெறும் ஞானத்தை இறைவனிடம் கேட்போம். ஏழைகளே விண்ணகத்திற்குச் செல்லும் கடவுச்சீட்டு.

தாய் தந்தையில்லாத ஏழைச் சிறுவன் ஒருவன், தெருக்களில் சிறு சிறு பொருள்கள் விற்று, தன் தங்கையைக் காப்பாற்றி வந்தான். அவன் ஒருநாள் அழுக்கான ஆடையுடன் ஓர் உணவகத்தில் உணவருந்த மேஜையில் அமர்ந்தான். ஆனால் அந்த உணவக முதலாளி உட்பட எல்லாருமே அவனை அலட்சியமாகப் பார்த்து, அவமானப்படுத்தி, விரட்டியடித்தனர். பின்னர், உணவகத்திற்கு வெளியே அமர்ந்திருந்த அவனிடம், என்ன வேண்டும் என்று கேட்டு, இரண்டு ரொட்டிகளை, வேண்டாவெறுப்புடன் கொடுத்தார் அதிகாரி. ஒன்றைத் தன் தங்கைக்கு வைத்துக்கொண்டு, மற்றொன்றை அவன் சாப்பிட்டான். அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் அதற்குரிய பணத்தைக் கொடுத்துச் சென்றான். ஆனால், டிப்ஸை தன் சாப்பாட்டு தட்டுக்கு அடியில் வைத்துவிட்டுச் சென்றான். அவன் சென்றபின், தட்டை எடுக்கச் சென்ற  அதிகாரி, வெட்கி தலைகுனிந்தார். இந்நிகழ்வை குறும்படமாக வெளியிட்ட ஜார்ஜ் வர்க்கீஸ் என்பவர் சொல்கிறார் - உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் தங்கள் அன்றாட உணவுக்காகக் காத்திருக்கின்றனர். அது உனக்குப் புரியவில்லையென்றால், நீ அவர்கள் பற்றி தவறாக எடைபோடாதே என்று. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சொன்னார் - உனது எதிர்காலத்தை மாற்ற முடியாது. ஆனால் உன் பழக்கவழக்கங்களை மாற்ற முடியும். உனது பழக்கவழக்கங்கள், உனது எதிர்காலத்தை நிச்சயமாக மாற்றும் என்று. எனவே, ஆடையின்றி இருப்பவரோ, பட்டாடை உடுத்தியவரோ, எவரையும் பார்த்தவுடன் எடைபோடுவதைத் தவிர்ப்போம். அன்புச் செயல்களில் முதலீடு செய்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.