2017-11-20 15:40:00

இரக்கம் என்பது பலவீனமல்ல, அது அவசியமான ஒன்று


நவ.,20,2017. சாலை போக்குவரத்துத் துறையிலும், இரயில் துறையிலும் பணியாற்றும் காவல்துறையினரை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு தன் நன்றியை வெளியிட்டார்.

ஓட்டுனர்கள் தங்கள் பொறுப்புணர்வை மறந்து செயல்படும் வேளையில், அவர்களின் விதிமீறல்களை ஆய்வுச் செய்வதும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதும், விபத்துக்களின்போது உதவுவதும் என பல்வேறு பணிகளை ஆற்றும் போக்குவரத்து காவல்துறையினர், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வுக் கல்வியை மக்களுக்கு ஊட்டுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இரயிலில் பயணம் செய்வோருக்கு பாதுகாப்பு, விபத்துத் தடுப்பு, குற்றங்கள் நிகழாதிருக்க கண்காணிப்பு போன்றவைகளில் ஈடுபடும் இரயில் காவல் துறையினருக்கும், தன் பாராட்டுக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தை ஒரு பலவீனமாக கருதாமல், மக்களை இரக்கத்துடன் அணுக வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம் எப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதையும், சாலை போக்குவரத்துத் துறை, மற்றும், இரயில் துறையில் பணியாற்றும் காவல்துறையினருக்கு வழங்கிய உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுயநலப்போக்கு, அநீதி, பாராமுகம் போன்றவற்றிலிருந்து வெளிவர ஒவ்வொருவரும் தொடர்ந்து முயலவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.