2017-11-18 15:16:00

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செபம் ஊக்கமூட்டுகின்றது


நவ.18,2017. இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கானில், "ஜோசப் இராட்சிங்கர் – 16ம் பெனடிக்ட் (Joseph Ratzinger- Benedetto XVI)" என்ற அமைப்பின் ஏறக்குறைய இருநூறு பிரதிநிதிகளைச் சந்தித்து, உரையாற்றி, இராட்சிங்கர் விருதையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செபமும், அமைதியான பிரசன்னமும், நம் பொது வாழ்வுக்கு ஊக்கமூட்டுவதாய் உள்ளது என்றும், அவரின் பணிகளும், அதிகாரப்பூர்வ ஏடுகளும் திருஅவைக்கும், நம் பணிக்கும் விலைமதிப்பற்ற சொத்தாக உள்ளன என்றும் பாராட்டிப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், உண்மையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, ஓர் ஆசிரியராகவும், நட்போடு உடன்வருபவராகவும் தொடர்ந்து பயணிக்கிறார் என்றும் உரைத்த திருத்தந்தை, இன்று இராட்சிங்கர் விருதைப் பெறும் மூவரும், லூத்தரன் சபை உட்பட மூன்று கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்கள் என்று புகழ்ந்து, அவர்களுக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜெர்மன் நாட்டு லூத்தரன் கிறிஸ்தவ சபை இறையியலாளர் Theodor Dieter, ஜெர்மன் நாட்டு இறையியலாளரும் கத்தோலிக்க அருள்பணியாளருமான Heinz Menke, எஸ்டோனியா நாட்டின் திருஇசை அமைப்பாளர் Arvo Part ஆகிய மூவரும், 2017ம் ஆண்டுக்கான இராட்சிங்கர் விருதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து பெற்றனர். மேலும், இம்மூவரும், ஜோசப் இராட்சிங்கர் – 16ம் பெனடிக்ட் அமைப்பின் தலைவராகிய இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்களுடன், இவ்வெள்ளியன்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.