2017-11-17 14:04:00

திருத்தந்தை : மரணத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பது நல்லது


நவ.17,2017. மரணத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பது நல்லது, இது ஆண்டவரைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வாக அமையும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

லூக்கா நற்செய்தி 17ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்நாளைய நற்செய்தி வாசகம் (லூக்.17,26-37), உலகின் முடிவு பற்றியும், நம் ஒவ்வொருவரின் இறுதி நாள் பற்றியும் சிந்திப்பதற்கு அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார், திருத்தந்தை.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை நிறைவேற்றியத் திருப்பலியில் இவ்வாறு மறையுரை வழங்கிய திருத்தந்தை, நோவா காலத்தில் நடந்த வெள்ளப் பெருக்கிற்கு முன்னும், லோத்தின் காலத்திலும், மக்கள் வாழ்ந்த நிலை பற்றியும், இறுதியில், ஆண்டவர் வெளிப்படும் நாள் பற்றியும் இந்நற்செய்திப் பகுதி சொல்கிறது என்று கூறினார்.

நம் அன்னையாகிய திருஅவை, நாம் ஒவ்வொருவரும் நம் மரணம் பற்றி சிந்திக்குமாறு அழைப்பு விடுக்கின்றது என்றும், நாம் நம் அன்றாட வேலைகளில் பழக்கப்பட்டு இருக்கின்றோம், ஆனால், ஒரு நாள் இயேசுவிடமிருந்து அழைப்பு வரும், அந்த அழைப்பு, சிலருக்கு உடனடியாக, வேறு சிலருக்கு நீண்ட நோயாக வரும், எனினும், அந்த அழைப்பு எவ்வாறு இருக்கும் என்பது நமக்குத் தெரியாது என்றும், திருத்தந்தை கூறினார். மரணம் பற்றி நினைத்துப் பார்ப்பது மோசமான கற்பனை அல்ல, அது எதார்த்தம் என்றும், மரணத்தில் ஆண்டவரைச் சந்திப்போம் என்றும், இதுவே மரணத்தின் அழகு என்றும் திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

ஆண்டவர் அழைக்கும்போது நம் காரியங்களைச் சரிசெய்வதற்கு நமக்கு நேரம் இருக்காது, ஆதலால், ஆண்டவர் நம்மைச் சந்திக்க வரும் அந்த நாளை நோக்கி எப்போதும் வாழ்வோம் என்று கூறி, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.