2017-11-17 14:38:00

சமய சார்பற்ற ஈராக்கிற்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம்


நவ.17,2017. ஈராக் நாடு மறுபிறவி எடுப்பதற்கு, நாட்டின் ஒன்றிப்புக்கு அடித்தளமான அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் அவசியம் என்று, அந்நாட்டு கத்தோலிக்க கல்தேய வழிபாட்டுமுறை அதிகாரி ஒருவர் கூறினார்.

ஈராக் நாட்டின் சர்ச்சைக்குரிய அரசியல் அமைப்பு குறித்து ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்த, பாக்தாத் துணை ஆயர் Shlemon Audish Warduni அவர்கள், சமத்துவம் மற்றும் மனித உரிமைக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு தேவைப்படுகின்றது என்று தெரிவித்தார்.

நவீன மற்றும் சனநாயக ஈராக் நாட்டை, ஷாரியா இஸ்லாமிய விதிமுறைகளில் சிலவற்றை அடிப்படையாக வைத்து அமைத்திருப்பது ஏற்க முடியாதது என்றும், வளங்கள் நிறைந்த ஓர் நாட்டை மீண்டும் வளமைப்படுத்துவதற்கு, நாட்டின் பல்வேறு  குழுக்களிடையே ஆர்வம் குறைவாக உள்ளது என்றும் கூறினார், ஆயர் Warduni.

பல ஆண்டுகள் போர்கள் மற்றும் இன வன்முறைகளைச் சந்தித்துள்ள ஈராக் நாட்டை, நீதி, சுதந்திரம் ஆகிய இரு தூண்களை அடித்தளமாகக் கொண்டு, மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கூறிய பாக்தாத் துணை ஆயர் Warduni அவர்கள், இஸ்லாமிய சட்டத்தின்கீழ் நிர்வாகம் அமைக்கப்பட்டால், மனச்சான்று சுதந்திரம் பற்றி எவ்வாறு பேச முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈராக்கில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நல்லிணக்க வாழ்வுக்கு கிறிஸ்தவர்கள் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வருகின்றனர் என்றும் கூறினார், ஆயர் Warduni.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.