2017-11-15 15:06:00

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் இறைவாக்குரைக்கும் பணி


நவ.15,2017. முதல் உலகப்போரின் கொடுமைகளால் துன்புற்றோருக்கு உதவும் வகையில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றிய ஆயர்கள், ஒன்றிணைந்து வந்த முயற்சியின் பயனாக, அந்நாட்டு ஆயர் பேரவை உருவானது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நவம்பர் 12, கடந்த ஞாயிறு முதல் பால்டிமோர் என்ற நகரில் நடைபெற்றுவந்த, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் இலையுதிர் கால கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டு ஆயர் பேரவை மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்கவும், சுவர்களுக்குப் பதில், பாலங்களை அமைக்கவும் அமெரிக்க ஆயர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று, 2016ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

சமுதாயத்தில், நலிந்த நிலையில் உள்ள, குடியேற்றதாரர், பெண்கள், தொழிலாளிகள் ஆகியோரின் உரிமைகளுக்குக் குரல்கொடுப்பது, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறைவாக்குரைக்கும் பணி என்று கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.

மேரிலாண்ட் மாநிலத்தின் பால்டிமோர் நகரில், நவம்பர் 12 மாலை துவங்கிய ஆயர் பேரவை கூட்டம், நவம்பர் 14, இச்செவ்வாயன்று நிறைவுற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.