2017-11-13 13:37:00

வாரம் ஓர் அலசல் – குழந்தை வளர்ப்பில் பெற்றோர்


நவ.13,2017. 12 வயது நிரம்பிய சிறுவன் சக்தி, பிற்படுத்தப்பட்ட குருவிக்கார இனத்தில் பிறந்தவன். இவன், காஞ்சிபுரத்தில் தியாகி நிதி நாடும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். உலக குழந்தைகள் அமைதி விருதுக்கு, சிறுவன் சக்தியை ஐ.நா.வில் பரிந்துரை செய்துள்ளது பள்ளி நிர்வாகம். காஞ்சியில் ஒரு கல்வித் தூதுவன்! என்று, சிறுவன் சக்தி பற்றி, ஒரு பத்திரிகை, பெருமையாகச் சொல்லியிருந்தது. சிறுவன் சக்தியின் அப்பாவும் அம்மாவும், ஊர்களில் திருவிழாக்கள் நடக்கும்போது, இவனின் தம்பியையும் தங்கையையும் கூட்டிக்கொண்டு கடை போடுவார்கள். அச்சமயத்தில் சக்தி, முயல் பிடிக்கக் காட்டுக்குப் போவான். தெருத் தெருவாக ஊசிமணி, பாசிமணி விற்கப் போவான். சக்தி, தன் குடும்ப நிலைமையை இவ்வாறு சொல்கிறான்..

ஒருநாள் நானும் அம்மாவும் பக்கத்து ஊர் திருவிழாவுக்குப் போக நினைத்தோம். ஆனால், பஸ் மாறி ஏறிவிட்டோம். அது, எங்களைத் தூரமான ஊரில் கொண்டுபோய் விட்டது. நானும் அம்மாவும் அங்கே இங்கே அலைந்து, மூன்று, நான்கு நாள்கள் கழித்து வீடு வந்து சேர்ந்தோம். எனக்குப் படிக்கத் தெரிந்திருந்தால், இப்படி ஆகியிருக்காதே என்று அப்போது நினைத்தேன். அதனால் பள்ளியில் சேர்ந்தேன். ஆனால் நான் முதலில் சேர்ந்த பள்ளியில், மற்ற பையன்கள் என்னைத் திட்டிக்கொண்டே இருந்தார்கள். அதன்பிறகுதான் இந்தப் பள்ளிக்கு வந்தேன்.  இந்தப் பள்ளிக்கு வந்தபின் எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது. என் அப்பா முன்னர் எல்லாம் மேல்சட்டைப் போட்டதே இல்லை. நான் பள்ளியில் படிப்பதைப் பார்த்துவிட்டு, அவரும் சட்டை போட ஆரம்பித்துவிட்டார். நான் நன்றாகப் படித்து பெரிய வேலைக்குப் போவேன். என் அப்பா அம்மாவை நன்றாகப் பார்த்துக்கொள்வேன் 

சிறுவன் சக்தி, கடந்த ஆண்டு, ‘ஹேண்டு இன் ஹேண்டு (Hand in Hand Foundation)’தொண்டு அமைப்பு வழியாக, காஞ்சி தியாகி நிதி நாடும் பள்ளியில் சேர்ந்தான். இங்கே படிக்கும் மாணவர்களில் எண்பது விழுக்காட்டினர், தொண்டு நிறுவனங்கள் மூலமாக வந்தவர்கள். சக்தி பற்றி அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி இவ்வாறு சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் சக்தியை வகுப்பில் பெஞ்சில் உட்கார வைக்கவே இரண்டு, மூன்று நாள் ஆனது. ‘வேணாம் மிஸ்... அப்புறம் இந்தப் பள்ளிக்கூடமும் எனக்கு இல்லாமல் போயிடும்னு தரையிலேயே உட்கார்ந்துப்பான். ‘இந்தப் பள்ளியில எல்லாரும் ஒண்ணுதான்னு அவனுக்குப் புரிய வெச்சோம். சீக்கிரமே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் கத்துக்கிட்டான். கொஞ்ச நாளிலேயே, ‘ஊருல இருக்கிற என் கூட்டாளிகளையும் இங்கே கூட்டிட்டு வரலாமா மிஸ்? நான் மட்டுமில்லாமல் அவங்களும் படிக்கணும் மிஸ்’னு சொன்னான். சக்தியின் நல்ல குணத்தைப் பார்த்துப் பெருமைப்பட்டோம்”என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். சக்தி இப்பள்ளியில் ‘சேர்ந்த ஓராண்டுக்குள்ளேயே தன் இனத்தைச் சேர்ந்த 25 சிறுவர்களைப் பள்ளியில் சேர்த்துள்ளான். பல தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து மாதக்கணக்கில் செய்யவேண்டிய பணியை ஒரே ஆளாக செய்திருக்கிறான் சக்தி. இதற்காக அவனை, ‘பன்னாட்டு குழந்தைகள் அமைதிக்கான ஐ.நா விருதுக்குப் பரிந்துரை செய்திருக்கோம் என்கின்றனர், தொண்டு நிறுவன அதிகாரிகள்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள், குழந்தைகளிடம் கொள்ளைப் பிரியம் கொண்டவர். இவர் பிரதமராக இருந்தபோது ஒருமுறை மதுரைக்கு வந்திருந்தார். மதுரையில் அதிகாரிகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு வியாபாரி பலூன் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே காரை நிறுத்தச் சொல்லி, நிறைய பலூன்களை வாங்கி, அங்கே இருந்த குழந்தைகளுக்குக் கொடுத்தார். அதோடு நிறுத்திவிடவில்லை. குழந்தைகளோடு பிரதமர் நேரு அவர்களே சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிட்டார். பலூன்களை எடுத்து ஊதி, குழந்தையாகவே அவர் மாறிவிட்டார் என்று சொல்வார்கள். இவர் பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியாவில் குழந்தைகள் தினமாகச் சிறப்பிக்கப்படுகின்றது.  இலங்கையில் அக்டோபர் முதல் நாளும், ஐ.நா. நிறுவனம், நவம்பர் 20ம் தேதியன்றும், பல நாடுகளில் ஜூன் முதல் நாளும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. சிறார் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் களையவும், சிறாரே சிறார்க்கு உதவவும், ஒருவர் ஒருவரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவும், உலக நாடுகளில் குழந்தைகள் தினம் சிறப்பிக்கப்படுகின்றது. குழந்தை எனும் வார்த்தையே அழகுதான். அதன் ஒவ்வொரு செயல்களும், ஏன் அழுகைக்கூட ஓர் அழகுதான். குழந்தைகளோடு இருக்கும்போது நேரம் போவதே தெரிவதில்லை. மழையில் குடைப்பிடித்து நின்ற குழந்தையை அம்மா அழைக்க...குழந்தை, குடையைக் குளிக்க வைக்கிறேன் என்றதாம். ஆனால் குழந்தை பிறப்பு குறைந்துவரும் இக்காலத்தில், குழந்தை வளர்ப்பிலுமே குறை இருப்பதாகவேத் தெரிகின்றது.

அந்தக் குடும்பத்தில், பெற்றோர் இருவரும் வேலைசெய்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை. அவர்களின் ஒரே மகன் ராஜா பள்ளிக்குக் கிளம்பும்போதே அவனுடைய பெற்றோரும் வேலைக்குக் கிளம்பிவிடுவார்கள். போகும்போது வீட்டின் சாவியை எதிர்வீட்டு கலா அத்தையிடம் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ராஜா, பள்ளியிலேயே கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதால் வீட்டுக்கு வரும்போது எப்போதும் சோர்வாகவே இருப்பான். கலா அத்தையிடம் சாவியை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததும் சிறிது நேரம் ஓய்வெடுப்பான். அடுத்து, அம்மா காலையில் சமைத்து வைத்திருக்கும் சிற்றுண்டியைச் சுடவைத்துச் சாப்பிடுவான். பின்னர், வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டுப் பெற்றோர் வரும்வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். ஒரு நாள், ராஜா வீட்டுக்கு வந்ததும், “டேய் ராஜா, இன்னைக்கு எங்க வீட்டில் சூடா வடை, பஜ்ஜி எல்லாம் செய்திருக்கிறேன். கை, கால் முகம் கழுவிக்கிட்டு வாடா” என்று கலா அத்தை கூறினார். பள்ளியிலிருந்து சோர்வாக வந்த ராஜாவுக்கு, அத்தை சொன்ன விடயம் மகிழ்ச்சியாக இருந்தது. எப்போதும் ஆறிப்போன உணவைச் சாப்பிட்ட ராஜாவுக்கு, சூடான பலகாரங்கள் புத்துணர்ச்சியைத் தந்தன. அதன்படி தினமும் மாலையில் எதிர் வீட்டில் சிற்றுண்டியைச் சாப்பிடத் தொடங்கினான் அவன். ஒரு நாள் அத்தை கலா, ராஜாவிடம், கடைக்குச் சென்று மளிகைப் பொருட்களை வாங்கி வரும்படி கூறினார். முதலில் தயங்கிய அவன் பின்னர் கடைக்குச் சென்றான். இன்னொரு நாள் படிக்கட்டில் இருக்கும் தண்ணீர் கேனை எடுத்துவரும்படி சொன்னார் அத்தை. ஏற்கெனவே சோர்வாக இருந்த ராஜாவுக்கு அத்தை சொன்ன வேலையை நிராகரிக்க முடியவில்லை. கனமான புத்தகப் பையைத் தோளில் சுமந்துகொண்டு ஒவ்வொரு படிக்கட்டாகத் தண்ணீர் கேனை நகர்த்தி எடுத்துக்கொண்டு அவர்கள் வீட்டு வாசலில் வைத்தான். அடிக்கடி இப்படி சின்னச் சின்ன வீட்டு வேலைகளைச் செய்யச் சொன்னது அவனுக்குக் களைப்பாக இருந்தது. இதிலிருந்து தப்பிக்க, வீட்டுச் சாவியைத் தன்னிடமே கொடுக்கும்படி பெற்றோரிடம் கேட்டான். பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வராமல் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சுற்றிவிட்டுத் தாமதமாக வருவதற்காகத்தான் ராஜா, சாவியைக் கேட்கிறான் என்று அவனுடைய பெற்றோர் தவறாக நினைத்தார்கள். அவர்கள் எதிர் வீட்டில் சாவி கொடுப்பதே, ராஜா எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருகிறான், என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தான் என்பதைக் கண்காணிக்கத்தான்.இது ஓர் உண்மைச் சம்பவம்.

இக்காலத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பு காணாமல் போய்விட்டதால், பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியும் ஆட்டம் காண்கிறது. குழந்தைகளை வேறொருவரின் கண்காணிப்பில் விட்டுவிட்டு வரும்போது, அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அண்டை வீட்டார் அல்லது நெருங்கிய உறவினர் குறித்து குழந்தைகள் ஏதாவது புகார் செய்தால் அதைப் பெற்றோர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எல்லா விடயங்களையும் குழந்தைகள் பெற்றோர்களிடம் எளிதாகப் பகிர்ந்துகொள்ளும் வகையில் சூழ்நிலையை உருவாக்குவது பெற்றோரின் கடமை என்று, குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர் ஒருவர் சொல்கிறார்.

குழந்தைகள் பெற்றோரின் உலகமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் உலகத்தை அழகாக அமைத்துக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் பெரிய கடமை. பெற்றோரின் கடமைகள் சிலவற்றை நினைவுபடுத்துகின்றோம்.

முதலில் பெற்றோர் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருங்கள்.

நல்ல உறவுகளை வளர்க்க கற்றுக் கொடுங்கள்.

கோபமான நிலையில் குழந்தைகளுக்கு கட்டளையிடாதீர்கள்.

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பதில், தாயும் தந்தையும் இணைந்து முடிவெடுங்கள்.

பெற்றோர், தங்களது கொள்கைகளில் உறுதியாய் இருங்கள். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்வது குழந்தைகளைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். 

குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்.

குழந்தை அடம்பிடித்து அழுதால் விட்டுவிடுங்கள்.

தவறுசெய்யும்போது மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள். அதேநேரம் குழந்தை தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கும்போது மன்னித்து விடுங்கள். உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கேளுங்கள்.

தாய்ப்பாலோடு சேர்த்து இறைபக்தியையும் ஊட்டுங்கள்.

மொத்தத்தில் நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுங்கள்.

நாடுகளின் எதிர்காலம், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பியிருக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.