2017-11-13 16:32:00

தேசிய ஒன்றிப்பு பாதையில் நடைபோட மியான்மார் கர்தினால் அழைப்பு


நவ.13,2017. பகைமை உணர்வைத் தூண்டும் பேச்சுக்களை கைவிட்டு, அமைதி மற்றும் இளம் தலைமுறையினரின் வருங்காலத்தை மனதில் கொண்டு, ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் மியான்மார் கர்தினால் Charles Maung Bo.

இம்மாத இறுதியில் மியான்மாரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உள்ள வேளையில், திருத்தூதுப் பயண தயாரிப்புக்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள யங்கூன் கர்தினால் Maung Bo அவர்கள், வன்முறைகளைக் கைவிட்டு, குணப்படுத்தல், சகிப்புத்தன்மை மற்றும் தேசிய ஒன்றிப்பின் பாதையில் அனைவரும் நடைபோட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் வன்முறைகளைக் குறித்து ஆய்வு செய்யும் குழு உருவாக்கப்பட்டுள்ளது பற்றியும் தெரிவித்த கர்தினால் Maung Bo அவர்கள், புலம்பெயர்ந்தோர் பிரச்சனையிலும் அரசு முழுக் கவனம் செலுத்தி வருவதையும் சுட்டிக்காட்டி, அரசின் நற்செயல்கள் புரிந்து கொள்ளப்பட்டு ஊக்கமளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இளைய தலைமுறையினருக்கு சிறந்ததொரு வருங்காலத்தை கட்டியெழுப்பும் பணியில், தொழில் துறையினர், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் கர்தினால் Maung Bo.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.