2017-11-11 16:16:00

நாணயம் அச்சிட்டு அருள்சகோதரியை கௌரவிக்கும் பாகிஸ்தான்


நவ.,11,2017. பாகிஸ்தானில் தொழுநோயை அகற்றுவதற்கு அயராது போராடி, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்த ஜெர்மன் அருள்சகோதரி Ruth Martha Pfau அவர்களை கௌரவிக்கும் விதமாக 50,000 நாணயங்களை வெளியிட உள்ளது பாகிஸ்தான் அரசு.

1960ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் தொழுநோயாளர்களிடையே பணியாற்றி வந்த அருள்சகோதரி Martha Pfau அவர்கள், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உயிரிழந்தபோது, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்சகோதரி Martha Pfau அவர்களின் தியாகத்தாலும், தன்னலமற்ற சேவையாலும் பயனடைத்துள்ள பாகிஸ்தான் நாடு, அவருக்கு கடன்பட்டுள்ளது என தெரிவித்தார், பாகிஸ்தான் பிரதமர் Shahid Khaqan Abbasi.

பாகிஸ்தான் பிரதமரின் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில், 50 ரூபாய் மதிப்புடன் கூடிய 50,000 நாணயங்களை, அருள்சகோதரி Martha Pfau அவர்களை கௌரவிக்கும் விதமாக வெளியிட உள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாகிஸ்தானின் மத்திய வங்கியும், இந்த நாணய வெளியீட்டிற்கு தன் ஒப்புதலை வழங்கியுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.