2017-11-11 16:19:00

Amoris Laetitia கருத்தரங்கு- திருத்தந்தையின் காணொளிச் செய்தி


நவ.11,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள 'Amoris Laetitia', அதாவது, அன்பின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடலை மையப்படுத்தி நடைபெறும் மூன்றாவது அனைத்துலக கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, திருத்தந்தை, காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

இத்தாலிய ஆயர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உலகக் கருத்தரங்கு, "சட்டத்திற்கும், மனச்சான்றிற்கும் இடையேயான அன்பின் நற்செய்தி" என்ற தலைப்பில் இடம்பெறுவது குறித்த மகிழ்ச்சியை, தன் காணொளிச் செய்தியில் வெளியிட்டுள்ள திருத்தந்தை, குடும்பங்களுக்கு நன்மை பயப்பவை எவையோ, அவையே, உலகம், மற்றும் திருஅவையின் வருங்காலத்திற்கும் முக்கியமானவை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு குடும்பமும் நற்செய்தி மதிப்பீடுகளின் அடிப்படையில் வாழ்வை அமைப்பது குறித்தும், மனச்சான்றை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய நடைமுறை வாழ்வில் குழப்பங்களை விளைவிக்கும் தவறான அர்த்தங்கள் மற்றும் கண்ணோட்டம் குறித்து, தன் செய்தியில் கவலையை வெளியிட்டுள்ள திருத்தந்தை, கணவன் மனைவிக்கிடையிலும், பெற்றோர், குழந்தைகளுக்கிடையிலும் நிலவும் கடின இதயங்களைக் களைவதற்கு, இறை இரக்கத்தின் துணையை எப்போதும் நாடுவோமாக என்று விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.