2017-11-10 15:31:00

அருளாளர் 6ம் பால் விடுத்த அழைப்பு இன்றும் தேவை


நவ.10,2017. திருத்தந்தை அருளாளர் 6ம் பால் அவர்கள், "மனிதகுல முன்னேற்றம்" (Populorum Progressio) என்ற தலைப்பில், 50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட திருமடல் விடுக்கும் அழைப்பு, இன்றும் நமக்குத் தேவையான கருத்தாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

"6ம் பால், நவீனமயத்தின் திருத்தந்தை" என்ற தலைப்பில், உரோம் நகரின் புனித பவுல் பசிலிக்காவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தியை, பவுல் பசிலிக்காவின் தலைமை அருள்பணியாளர், கர்தினால் மைக்கிள் ஹார்வி அவர்கள் வாசித்தார்.

"முழு மனித முன்னேற்றம் மற்றும் மனிதகுலத்தின் முன்னேற்றம்" என்ற மையக்கருத்துடன், திருத்தந்தை 6ம் பால் அவர்கள் எழுதிய திருமடல், இன்றைய காலத்திற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எந்த ஒரு முன்னேற்றமும், 'மக்களிடையே நீதி' என்ற அடித்தளத்தின் மீது அமைக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

"மக்களிடையே நீதி மற்றும் இத்தாலியின் மீது அன்பு" என்பது, இக்கருத்தரங்கின் துணை தலைப்பு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, உண்மையான இத்தாலிய உள்ளம் கொண்டோர், நீதியின் மீதும், மனிதகுலத்தின் மீதும் ஆழ்ந்த பற்று கொண்டோர் என்பதையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.