2017-11-09 15:52:00

திருப்பலியில் புகைப்படங்கள் எடுப்பது வேண்டாம் - திருத்தந்தை


நவ.09,2017. திருப்பலி வேளையில், தங்களிடம் உள்ள தொலைபேசியைக் கொண்டு புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்துவோரைக் காணும்போது தான் அதிகம் வேதனை அடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நவம்பர் 8, இப்புதனன்று, திருப்பலியை மையப்படுத்தி, புதன் மறைக்கல்வி உரை வழங்கிய வேளையில், புனித பேதுரு பசிலிக்கா, மற்றும் வளாகத்தில் தான் திருப்பலியாற்றும் வேளையில், பலர், தங்கள் கைப்பேசியைக் கொண்டு புகைப்படங்கள் எடுப்பது தனக்கு வேதனை தருகிறது என்று கூறியத் திருத்தந்தை, திருப்பலி ஒரு கேளிக்கை காட்சியல்ல என்று வலியுறுத்திக் கூறினார்.

புகைப்படங்கள் எடுப்பது, விசுவாசிகள் மட்டுமல்ல என்றும், அருள்பணியாளர்கள், ஆயர்கள் என்று அனைவரும் இந்த தவறை செய்து வருகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இந்தத் தவறை அனைவரும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

திருப்பலியின் நடுவே, பலியாற்றும் அருள்பணியாளர், 'இதயங்களை மேலே எழுப்புங்கள்' என்று சொல்கிறாரே தவிர, 'தொலைப்பேசிகளை மேலே எழுப்புங்கள்' என்று சொல்வதில்லை என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருப்பலி நேரத்தில் ஆண்டவர் மட்டுமே நம் முழு கவனத்தையும் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று கூறிய இச்சொற்கள், தற்போது, சமூக வலைத்தளத்தில் பெருமளவு பகிரப்பட்டு வருகின்றன.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.