2017-11-08 15:50:00

பொருளாதாரமும், அதிகார வெறியும், போர்களின் காரணிகள்


நவ.08,2017. அமைதி வெறும் கனவல்ல, அது சாத்தியமான நடைமுறையே என்பதை, நாம் அனைவரும் நம்பவும், அமைதியை நோக்கி தேடலை மேற்கொள்ளவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவையொன்றில் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள், 'உலக அமைதியை உறுதியாக்க மதங்களின் பங்கு' என்ற தலைப்பில், நவம்பர் 7, இச்செவ்வாயன்று நடைபெற்ற பன்னாட்டு கூட்டமொன்றில் இவ்வாறு கூறினார்.

கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற போர்களில், உயிரிழந்தோரில், 90 விழுக்காட்டினர் பொது மக்களே என்று கூறிய பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், கட்டுப்பாடு ஏதுமின்றி வளர்ந்துவரும் பொருளாதாரக் கொள்கைகளும், அதிகார வெறியும் போர்களின் அடிப்படை காரணிகளாக உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

அமைதி என்பது, போர்கள் இல்லாத நிலை மட்டுமல்ல, மாறாக, மக்களிடையே, சமத்துவம், நீதி, சம வாய்ப்புக்கள் என்ற சூழலை உருவாக்குவதே, உண்மையான அமைதியைக் கொணரும் என்று பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

உலகின் அனைத்து நாடுகளிலும், மதத் தலைவர்கள் கூடிவந்து உலக அமைதிக்கென தங்களையே அர்ப்பணித்து வருகின்றனர் என்று எடுத்துரைத்த பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், மதங்களிடையே உருவாகும் புரிதல், அமைதியை பெருமளவு உறுதி செய்யும் என்று கூறினார்.

அயலவரைக் குறித்து அக்கறையற்ற மனநிலை நிலவுவதே பல  மோதல்களுக்குக் காரணம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், அயலவரை உடன்பிறந்தோராக காணும் கண்ணோட்டம், மோதல்களை, பெருமளவு நீக்கும் என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.