2017-11-07 16:28:00

தென் சூடான் குழந்தைகளின் உணவுப் பற்றாக்குறை


நவ.07,2017. தென் சூடானில் 5 வயதிற்கு உட்பட்டக் குழந்தைகளில் 11 இலட்சத்திற்கும் மேற்பட்டோர், வரும் ஆண்டில், போதிய சத்துணவு இன்றி வாடும் நிலை உருவாகியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டில், தென் சூடானில், 11 இலட்சம் குழந்தைகள், போதிய சத்துணவின்றி வாடும் நிலையிலிருக்க, 3 இலட்சம் குழந்தைகள் வரை, பசியால் இறக்கும் ஆபத்தும் இருப்பதாக பிறரன்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

தென் சூடான் மோதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதாலும், பணவீக்கம் அதிகரித்திருப்பதாலும், தற்போதைய அறுவடைகளின் துணைகொண்டு அந்நாட்டு மக்களின் பசியைப் போக்கமுடியாது எனக்கூறும், தென் சூடான் அரசு, உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (FAO), யூனிசெஃப் WFP மற்றும் பல்வேறு அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு தென் சூடானில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவிக்கிறது.

தென் சூடானில் இன்றைய மோதல்களுக்கு உடனடி தீர்வு காணப்படவில்லையெனில், அடுத்த ஆண்டின் உணவுப் பற்றாக்குறை மிகவும் தீவிரமடையும் என்றும், இவ்வமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.